23 செப்டம்பர், 2010

பாதுகாப்புத் தரப்பினர் மீதான இடம்பெயர்ந்தோரின் குற்றச்சாட்டுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவில் விசாரணை

இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்புத் தரப்பினர் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழு முல்லைத்தீவில் இராணுவத்தினரிடம் திங்கட்கிழமை (20.09.2010) விசாரணைகளை மேற்கொண்டது.

புலிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தபோது தம்மை இராணுவத்தினர் தாக்கியதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் பொதுமக்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

எனவே பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து இராணுவத்தினரின் விளக்கத்தை அறிந்துகொள்ளும் முகமாக முல்லைத்தீவு 59 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஆரியசிங்க தலைமையிலான அதிகாரிகளிடம் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையிலான குழுவினர் விசாரதீ ணகளை மேற்கொண்டனர்.

தாம் தப்பி வர முயன்ற போது புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதேநேரம், இராணுவத்தினர் புலிகள் மீது நடத்திய பதில் தாக்குதலில் தாம் பாதிக்கப்பட்டதாகவும் கிளிநொச்சி, கணடாவளை, பூநகரி ஆகிய இடங்களில் நடைபெற்ற விசாரணைகளின் போது பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இராணுவத்தினரின் நிலைப்பாட்டை கேட்டுத் தெரிந்துகொண்ட ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா, தற்போது இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளைப் பாராட்டியதுடன், நேரில் வந்ததால் உண்மையைப் புரிந்துகொள்ள முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆணைக் குழுவின் தலைவரது கேள்விகளுக்குப் பதில் அளித்த கேணல் ஆரியசிங்க, ‘பொதுமக்களின் நிலைகளைத் தெரிந்துகொள்வதற்காக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதல் இலக்குகளைத் தெரிவுசெய்தோம். ஆனால், யார் யார் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுகொள்வது கடினமானது.

பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தியதால் இராணுவத்தினருக்குப் பலத்தசேதம் ஏற்பட்டது. நாம் ஜனவரி மாதம் முல்லைத்தீவைக் கைப்பற்றினோம். அப்போது 72407 பொதுமக்கள் வந்தார்கள். 4 பேர் உயிரிழந்தார்கள். பொதுமக்கள் மத்தியில் இருந்த புலிகள் நடமாடும் குண்டுத் தொழிற்சாலையை வைத்திருந்தார்கள்’ என்று குறிப்பிட்டார்.

பொதுமக்களின் சொத்துக்களை இராணுவத்தினர் பயன்படுத்துவதாக சுமத்தும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதில் அளித்த 59ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, எந்தவொரு தனியார் சொத்தையும் இராணுவத்தினர் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

முன்பு முகாமில் இருந்து மீளக்குடியமர வந்தவர்கள் மற்றுமொரு முகாமில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோதிலும், தற்போது அவர்கள் நேரடியாகத் தமது சொந்த வாழ்விடத்திற்கு வருகை தருவதாகத் தெரிவித்தார்.

மீனவர்களை ஓர் அமைப்பாக செயற்படுத்த வழியேற்படுத்தும் வகையில் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்றாலும் உள்ளூர் மீனவர்களுக்கு மட்டுமே தற்போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் நிரந்தரமாகக் குடியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அதேநேரம், காலப்போக்கில் சந்தை வாய்ப்பு சீரானதும், ஏனையவர்களும் போட்டிபோட மீனவர்களின் உழைப்புக்கேற்ற ஊழியத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக