23 செப்டம்பர், 2010

சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வில் அரசின் செயற்பாடுகள் முழுத்திருப்தி

நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்தவிடம் ராதிகா குமாரசுவாமி பாராட்டு

ஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்த சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களின் கல்விச் செயற்பாடுகளைப் பலப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை ஐ. நா. செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி ராதிகா குமாரசுவாமி பாராட்டியுள்ளார்.

சிறுவர் போராளிகளற்ற சூழலொன்று இலங்கையில் உருவாகியுள்ளமை சிறந்த நிலையாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள் ளார். ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் சிறுவர் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரம் தொடர்பான ஐ. நா. செயலாளர் நாயகத் தின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி க்குமிடையிலான முக்கிய பேச்சுவார்த்தை யொன்று நேற்று முன்தினம் நியூயோர்க்கில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையில் யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளமை தொடர்பில் அவர் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். அத்துடன் ஆயுத மோதல்களற்ற சிறுவர் அபிவிருத்திக் கான சூழல் இலங்கையில் கட்டியெழுப்ப ப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தினால் தமது சிறுவர் பராயத்தை இழந்துள்ள சிறுவர்களின் புனர்வாழ்வு மற்றும் கல்விச் செயற்பாடுகள் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் செயற்பாடுகளுக்கு அரசு முன்னுரிமையளித்து வருவதாக இதன்போது தெளிவுபடுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இச்செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த ஐ. நா. பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி, மேற்குலக ஊடகங்கள் எத்தகைய கருத்துக்களை வெளியிட்டபோதும் இலங்கையில் சிறுவர் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் உலகில் மோதல்களில் ஈடுபட்ட நாடுகளை விட திருப்திப்படக் கூடியதாக உள்ளதாகவும் எனினும் அதனை வெளியிடுவதில் சிக்கல்கள் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி சந்திப்பில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீரங்கா எம்.பி. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஐ. நா. அமைப்பின் இலங்கைக் கான வதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன்னே உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக