23 செப்டம்பர், 2010

தமிழ் மொழி மூல பிரிவில் தம்பிலுவில் மாணவி சுபதா அகில இலங்கை ரீதியில் முதலிடம்








புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூல பிரிவில் முதலிடம் பெற்ற தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா (193 புள்ளிகள்) நேற்று தினகரனுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

தான் தினமும் அதிகாலையில் எழுந்து படித்து வருவதாகவும் தனக்கு பெற்றோரும் வகுப்பாசிரியரும் அதிகம் ஊக்கமளித்ததாகவும் சுபதா கூறினார்.

தனது வெற்றி குறித்து தினகரன் வாசகர்களுடன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட சுபதா மேலும் கூறியதாவது :-

‘அகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்றது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது பெற்றோரும், ஆசிரியர்களும், அதிபரும் தந்த ஊக்குவிப்பு காரணமாகவே என்னால் இந்த வெற்றியை அடைய முடிந்தது.

பாடசாலை படிப்புக்கு மேலதிகமாக பகுதி நேர வகுப்புகளுக்கும் சென்றேன். பாடசாலை கல்வியைப் போன்றே பகுதி நேர வகுப்புக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்தேன். தினமும் அதிகாலையில் எழுந்து படிப்பதை வழமையாகக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவியாகத் தெரிவானேன். மருத்துவராக வர வேண்டும் என்பதே எனது எதிர்கால ஆசையாகும்’ இவ்வாறு சுபதா கூறினார்.

சுபதாவின் தந்தை மகேந்திரன் மாலவன் கூறியதாவது :-

மகள் மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தே இந்தப் பெறுபேற்றைப் பெற்றார். அவர் அகில இலங்கை ரீதியில் முதலிடம் வருவார் என்று எதிர்பார்த்தோம். 195 புள்ளிகளை விட அதிக புள்ளிகளை பெறுவார் என்று நினைத்தோம் ஆனால் 193 புள்ளிகள் கிடைத்தது மகிழ்ச்சியே.

சிறுவயது முதல் மகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டினார். ஏனைய பிள்ளைகளைப் போன்று மாலையில் விளையாடினார். இரவிலும் காலையிலும் படித்தார். சுபதாவின் தாயார் சிவசுப்பிர மணியம் உமையாளும் மகளின் சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

மாலவன், உமையாள் தம்பதியின் ஏகபுதல்வியே சுபதா என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக