23 செப்டம்பர், 2010

நாடாளுமன்ற பேரவைக்கான பெயர்கள் சபாநாயகரினால் இன்று அறிவிப்பு

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்ட நாடாளுமன்றப் பேரவைக்கான பெயர் விபரங்களைச் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிமை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று நாடாளுமன்ற வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

18 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் கடந்த 8ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதையடுத்து தங்களுடைய பிரதிநிதிகளின் பெயர்களை சிபாரிசு செய்யுமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பிரதமர் தி.மு. ஜயரட்ன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு 13 ஆம் திகதி எழுத்து மூலம் அறிவித்திருந்தார். பேரவைக்கான பிரதிநிதிகளின் பெயர்களைக் கடிதம் கிடைக்கப் பெற்ற ஒருவார காலத்திற்குள் சிபாரிசு செய்ய வேண்டும் என்றே அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. திருத்தத்தின் பிரகாரம் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தங்களின் பிரதிநிதிகளை தமது இனத்தை சாராத ஒருவரின் பெயரையே சிபாரிசு செய்யவேண்டும்.

நாடாளுமன்ற பேரவைக்கென எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டதரணி எம்.ஏ. சுமந்திரனின் பெயரை சிபாரிசு செய்த போதிலும் அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்து விட்டது.

இந்நிலையில் வழங்கப்பட்டிருந்த ஒருவார காலம் நேற்று புதன்கிழமையுடன் நிறைவடைந்து விட்டது. தான் சிபாரிசு செய்ய வேண்டியவரின் பெயரை பிரதமர் தி.மு ஜயரட்ன சபாநாயகருக்கு நேற்று புதன்கிழமை அறிவித்ததாக அவரது காரியாலய வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. பிரதமரினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பெயர் விபரத்தையே சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவிருக்கின்றார். நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்குக் கூடுவதுடன் அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படும்.

பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் தங்களுடைய பிரதிநிதிகளின் பெயர்களைச் சிபாரிசு செய்யாவிடின் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி நாடாளுமன்ற பேரவைக்கு இரண்டு பிரதிநிதிகளின் பெயரை சிபாரிசு செய்து நாடாளுமன்ற பேரவையை நிறுவமுடியும்.

ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதன் பின்னர் நாடாளுமன்ற பேரவையை நிறுவுவதற்கான அனுமதியை வழங்குவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக