23 செப்டம்பர், 2010

ஆஸி. முகாம் அகதிகள் போராட்டங்களில் இறங்கலாம் என அதிகாரிகள் அச்சம்

அவுஸ்திரேலிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகள் போராட்டங்களில் இறங்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

சிட்னியில் உள்ள வில்லாவூட் தடுப்பு முகாமில் திங்களன்று ஆரம்பித்த போராட்டம் புதன்கிழøம முடிவுக்கு வந்தது. முகாமின் இரண்டு மாடிக் கட்டடக் கூரையில் ஏறியிருந்த ஒன்பது இலங்கை தமிழர்களும் கீழே இறங்க சம்மதித்தனர்.

அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணைய அதிகாரிகள் அவர்களின் அடைக்கலக் கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக வாக்குறுதி கொடுத்ததை அடுத்தே அவர்கள் ஒன்பது பேரும் கீழே இறங்கச் சம்மதித்தனர்.

அதேவேளை கூரை மீது ஏறி நின்று போராட்டம் நடத்தியவர்களுக்கு தாம் எந்த உறுதிமொழியையும் வழங்கவில்லை என்று அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தப் போராட்டம் அவுஸ்திரேலியாவில் ஏனைய முகாம்களில் உள்ள அகதிகளுக்கு முன் உதாரணமாக அமையலாம் என்றும் அவர்களும் இது போன்ற போராட்டங்களில் இறங்கலாம் என்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

இதையடுத்து அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் நேற்று கிறிஸ்மஸ் தீவு முகாமுக்குச் சென்றுள்ளார். கடந்த பல மாதங்களாகவே கொள்ளளவை நெருங்கியுள்ள கிறிஸ்மஸ் தீவு முகாமில் உள்ள அகதிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யவே அவர் அங்கு சென்றுள்ளார். குடிவரவு அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற பின்னர் இவர் கிறிஸ்மஸ்தீவு முகாமுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக