23 செப்டம்பர், 2010

துரோகத்துக்கு மன்னிப்பு கோருகிறேன் மக்களுக்காக சிறைசெல்லவும் தயார்-ரணில்

ஐக்கிய தேசிய முன்னணியில் பாராளுமன்றத்துக்கு வந்த எம்.பி.க்கள் சிலர் அரசாங்கத்துக்கு ஆதரவளித்ததன் மூலம் நாட்டு மக்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகமிழைத்து விட்டனர். இந்த நம்பிக்கைத் துரோகத்துக்காக தலைவர் என்ற வகையில் வாக்களித்த சகலரிடத்திலும் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவித்தார்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் மற்றும் ஊடகங்களை முடக்கியுள்ள அரசாங்கத்தின் சர்வாதிகாரப் பயணம் என்பவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் போராட்டத்தில் சிறைக்குச் செல்வதற்கும் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் சூளுரைத்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய இளைஞர் முன்னணியுடனான சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பு கேம்பிரிட்ஜ் ரெரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டம் புறக்கணிக்கப்பட்டு அதன் அனைத்து அதிகாரங்களும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டுள்ள ஒரு யுகத்திலேயே நாம் இருக்கின்றோம். சகல அதிகாரங்களும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டுள்ள 18 ஆவது திருத்தச் சட்டத்தினூடான சர்வாதிகார பயணத்தை தடுத்து நிறுத்தியாக வேண்டும். மக்கள் மயமான திருத்தச் சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டமாகும். குடும்ப ஆதிக்கத்துக்கான திருத்தத்தை நாம் என்றும் எதிர்க்கின்றோம்.

ஐக்கிய தேசிய முன்னணியாக செயற்பட்டு தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வந்தவர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் நின்று 18 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களித்திருந்தால் இன்றைய சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்துள்ள 18 ஆவது திருத்தச் சட்டத்தை எம்மால் தோல்வியுறச் செய்திருக்க முடியும். ஆனாலும் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவாகிய எம்.பி. க்கள் சிலர் தமது வாக்காளர்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகமிழைத்து அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். இதன் மூலம் அவர்கள் நாட்டு மக்களைக் காட்டிக் கொடுத்து விட்டனர்.

கட்சியின் மீதும் உறுப்பினர்களின் மீதும் நம்பிக்கை வைத்திருந்த மக்களை எமது உறுப்பினர்கள் ஏமாற்றியமைக்காக கட்சித் தலைவர் என்றவகையில் நான் மக்களிடத்தில் மன்னிப்புக் கோருகிறேன்.

இது ஒருபுறமிருக்க 18 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் அதற்கு எதிரான எமது போராட்டம் முடிந்தவிடவில்லை. எமது நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் மக்களுக்கான நல்லாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால் இன்றயை இளைஞர் சமுதாயம் விழிப்படைய வேண்டும். அரசாங்கத்தின் சர்வாதிகாரப் பயணத்துக்காக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ள நிலைமையைக் காணுகின்றோம். இந் நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் எதிர்காலம் கருதியதாக எமது அடுத்த கட்ட நகர்வுகள் அமைய வேண்டும். மேலும் கொழும்பு நகரில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி இங்கு சீனாவின் வர்த்தகத்தை விருத்தி செய்யும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, அரசாங்கத்தின் இத்தகைய கண்மூடித்தனமான செயற்பாடுகள் மற்றும் 18 ஆவது திருத்தத்தினூடான சர்வாதிகாரப் பயணம் ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழவதும் மக்கள் போராட்டங்களை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது. அரசாங்கத்தினால் தலைநகருக்கும் இங்குள்ள மக்களுக்கும் இழைக்கப்படுகின்ற அநீதிக்கு எதிராக வரும் ஒக்டோபர் மாதம் முழு அளவிலான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்காக இளைஞர் அணி, சிவில் அமைப்புக்கள், பொது மக்கள் என சகலரும் முன்வர வேண்டுமென கேட்கிறேன். சில வேளைகளில் எமது போராட்டங்களை முடக்குவதற்கும் அடக்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடும். அது பற்றி எமக்கு கவலையில்லை. மக்களுக்காக சிறை செல்வதற்கும் தயாராக இருக்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக