8 டிசம்பர், 2010

1,60,000 பேர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்:மாவை எம்.பி


மீள்குடியேற்றப்படுவதற்கு இன்னும் 23 ஆயிரம் பேரே எஞ்சியிருப்பதாக அரசு கூறியிருக்கின்றபோதிலும் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் தற்காலிக தங்குமிடங்களிலோ அல்லது உறவினர்,நண்பர்களது வீடுகளிலோ தங்கியிருக்கின்றனர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார்.

மோசமான காலநிலை மழை வெள்ளம் ஆகியவற்றால் மீள்குடியேற்ற பிரதேசங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. மக்கள் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் பசியிலும் பட்டினியிலும் அவல நிலைக்குள்ளாகியுள்ளனர். பாதுகாப்பான ஏற்பாடுகள் எதுவும் அங்கு இல்லை. எனவே அரசாங்கம் மீள்குடியேற்ற அமைப்பும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான ஏழாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் காலநிலை மாற்றத்தால் முழு நாடும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. இது வடக்கு கிழக்கில் அதிகமாகும். மீள்குடியேற்றப் பிரதேசங்களில் கட்டுக்கடங்காத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பாரிய அவலம் காணப்படுகிறது.

இந்த நிலைமைகளை நாம் முன்னரே எடுத்துக்கூறியிருந்தோம். வருடத்தின் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் இவ்வாறான அனர்த்தம் வரும் என்பதையும் எனவே அதற்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியிருந்தோம்.

இன்று மீள்குடியமர்த்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற மக்கள் வெள்ளத்தினாலும் மழையிலும் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்கள் இன்றி பசி பட்டினியுடன் அவலப்படுகின்றனர். இதனை இங்கு வேதனையுடன் தெரிவிக்கின்றோம், கடந்த 27 ஆம் திகதி வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.ஆனாலும் இவர்களுக்கு தேவையான வசதிவாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. இவர்களது இழப்புக்கள் குறித்து எந்த விதமான மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இங்கிருந்து 26 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 81 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இங்கு இன்னும் 21 ஆயிரம் குடும்பங்களை மீள்குடியேற்றப்படவிருக்கின்றனர். வடமராட்சி கிழக்குக்கான போக்குவரத்து தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. இன்னும் 23 ஆயிரம் பேரே மீள்குடியமர்த்தப்படவிருப்பதாக அரசாங்கம் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் கூறிவருகின்றது. ஆனால் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மக்கள் இன்னும் முகாம்களிலும் உறவினர்களது வீடுகளிலும் தற்காலிக முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவின் கேப்பாப்பிளவு என்ற இடத்தில் 300 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவேண்டும். ஆனால் இங்கு 7 கிலோ மீற்றர் தூரத்திற்கு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மக்கள் அங்கு மீள்குடியேற்றப்படவில்லை. சம்பூரைச் சேர்ந்த சுமார் 6000 குடும்பங்கள் 5 வருடங்களாக அநாதரவாக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றனர். இவர்களும் மோசமான அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவ்விடயங்களில் அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

தமிழகத்தின் கரையோரப் பிரதேசங்கள் இவ்வாறு இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களில் அங்குள்ள அரசு உடனடியாக கூடி ஆராய்ந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இது இலங்கையிலும் பேணப்படவேண்டும் மழையின் பாதிப்புக்கு உள்ளாகின்ற வன்னி நிலப்பரப்பு தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகள் ஜனாதிபதியுடன் கூடி ஆராய்ந்து உடனடி தீர்வுகளையும் நிவாரணங்களையும் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் காலநிலை மாற்றத்தின் போது வடக்கு கிழக்கு கரையோரப் பிரதேசமே பெரிதும் பாதிக்கப்படுகின்றது. எனவே இதன் தொடர்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக விசேட ஆணைக்குழுவொன்றினை அமைத்து அந்த மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றேன். மீள்குடியேற்றப்பட்ட மக்கள் ஒருபுறத்தில் வசதிவாய்ப்புகள் நிவாரணங்கள் அற்ற நிலையில் இருக்கின்ற அதேவேளை மறுபுறத்தில் பசி பட்டினி மற்றும் மழை வெள்ளத்தினால் பாரிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இவர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்குமாறு கேட்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக