ஜீ. எஸ்.பி. சலுகை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு அடிபணியப் போவதில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு ஜீ. எஸ். பி. சலுகை வழங்க ஐரோப்பிய யூனியன் 15 நிபந்தனைகளை விதித்திருக்கிறது.
15 நிபந்தனைகளை உள்ளடக்கிய கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுச் செயலர் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிபந்தனைகள் எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதவையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 17வது திருத்தத்தை நிறைவேற்றுதல், அவசர கால சட்டத்தை முழுமையாக நீக்குதல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்தல் உட்பட 15 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவைகள் நாட்டின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவையென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடந்த அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை அமைச்சரவை நிராகரித்துள்ளது. இதேவேளை, எந்தவொரு சவாலையும் ஏற்கத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்துள்ள அரசாங்கம், ஆடைத் தொழிலாளருக்கு ஏற்படும் பாதிப்பை சமாளிக்கும் வகையில் அரசாங்கம் மாற்றுத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதென அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,
“எதிர்க் கட்சிகளும் அரச சார்பற்ற இயக்கங்களும் புலம்பெயர் அமைப்புகளும் முன்வைத்து வந்த கோரிக்கைகளையே ஜீ.எஸ். பி. பிளஸ் சலுகை நீடிப்பதற்கான நிபந்தனைகளாக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ளது. ஜீ. எஸ்.பி. பிளஸ் தொடர்பான சவாலுக்கு எமது அரசாங்கம் முகம்கொடுக்க தயாராக உள்ளது. இதனால் ஆடைத் தொழிற்றுறையினருக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கவும் அவர்களின் நலன்களை பாதுகாக்கவும் அரசாங்கம் மாற்று ஒழுங்குகளை முன்னெடுக்க உள்ளது” எனக் கூறினார். கடந்த காலங்களில் ஜீ. எஸ். பி. சலுகை வழங்கும்போது தொழிலாளர்களின் நலன்களுடன் தொடர்புடைய நிபந்தனைகளே முன்வைக்கப்படும். ஆனால் இம்முறை சம்பந்தமில்லாத நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசியல் யாப்பை திருத்துமாறும் அவசரகால சட்டத்தை நீக்குமாறும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்யுமாறும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சரத்துகளை நீக்குமாறு, 17 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் மூலம் முழு இலங்கை மக்களும் அவமதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனைகள் குறித்து வெட்கப்படுகிறேன். இந்த நிபந்தனைகள் நாட்டின் இறைமைக்கு குந்தகமானவை.
ஒரு போதுமில்லாதவாறு இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு 6 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுக்கக் கூடிய சக்தி எமக்கு இருக்கிறது. 15-20 வருடங்கள் ஆடைத் தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ளவர்க ளுக்கு திறந்த சந்தையில் போட்டியிடக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்த நிபந்தனையையும் நாம் ஏற்கமாட்டோம். இவற்றில் பாதி நிபந்தனைகள் புலம்பெயர் அமைப்புகள் கோருபவை. ஏனையவை ரணில் விக்கிரமசிங்கவும், கருஜயசூரியவும், மனோ கணேசனும், ரவூம் ஹக்கீமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கோருபவை என்றார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் கூறியதாவது;
ஜீ. எஸ். பி. சலுகை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லையென அவர் கூறினார். நாட்டின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் 15 நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ளதென தெரிவித்த அமைச்சர், வர்த்தக நடவடிக்கைக்கும் 17வது திருத்தத்திற்கும் எவ்வித தொடர்புமில்லையெனவும் குறிப்பிட்டார்.
ஜீ. எஸ்.பி. சலுகைகள் மீதான நிபந்தனைகள் மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணத்துவ குழு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; ஜீ. எஸ்.பி. சலுகைகளைப் பெற்றுக்கொள்வது சம்பந்தமாக அரசாங்கம் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அம்சமாக நிதியமைச்சின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழுவொன்றை அரசாங்கம் அமைத்துள்ளதுடன் கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் அக்குழு பிரஸல்சுக்குச் சென்று தீர்க்கமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டது.
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் ஐரோப்பிய ஒன்றியம் ஜீ. எஸ்.பி. சலுகையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கு இணக்கம் தெரிவிப்பதாகவும் அதேவேளை ஒன்றியம் விதித்துள்ள 15 நிபந்தனைகளை 6 மாதகாலங்களுக்குள் நிறைவேற்ற வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுச் செயலாளர் கந்தரின் ஈஸ்டன் கடந்த 17ம் திகதி அனுப்பி இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக