25 ஜூன், 2010

இறுதிக்கட்ட போர் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமைக் குழுவை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்' இலங்கை வெளியுறவு மந்திரி எச்சரிக்கைஇறுதிக்கட்ட யுத்தம் நடந்தபோது மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க ஐ.நா. நியமித்து இருக்கும் மனித உரிமைக் குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என அந்த நாட்டு வெளியுறவு மந்திரி காமினி லட்சுமண் பெய்ரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. நியமித்த குழு

இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, மனித உரிமையை இலங்கை ராணுவம் அப்பட்டமாக மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டதாகவும் புகார் கூறப்படுகிறது. மேலும், இலங்கை அதிபர் ராஜபக்சேயை போர்க் குற்றவாளியாக அறிவிக்கவும் வலியுறுத்தப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு நாடுகள் முழு ஆதரவு அளிக்கின்றன. இந்த சூழ்நிலையில், இலங்கை இறுதிகட்ட போரில் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க மூன்று உறுப்பினர்களை கொண்ட குழுவை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி மூன் நியமித்து இருக்கிறார்.

இலங்கை எதிர்ப்பு

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நியமிக்கப்பட்ட இந்த குழுவுக்கு இந்தோனேசியா முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி துருஸ்மான் தலைவராக உள்ளார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வக்கீல் ஸ்டீவன் ரத்னர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவை நியமித்த உடனேயே, இலங்கையில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `சுதந்திரமான நீதித்துறை நடைமுறையை கொண்ட இறையாண்மை மிக்க நாடாக இலங்கை உள்ளது. நீதித்துறை நிர்வாகத்தை செம்மையாக செயல்படுத்தி வருகிறது. இலங்கையில் பூசலை தவிர்த்து மீண்டும் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு கமிஷனை அதிபர் ராஜபக்சே நியமித்து இருக்கிறார். 30 ஆண்டுகளாக தீவிரவாதத்தால் நாசமான இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது. இந்த நிலையில், ஐ.நா.வின் இந்த செயலானது தேவையற்ற தலையீடாக இருக்கிறது' என தெரிவித்தது.

மந்திரி எச்சரிக்கை

இந்த சூழ்நிலையில், ஐ.நா. நியமித்துள்ள மனித உரிமைக் குழுவினர் இலங்கைக்கு வந்தால் அவர்களை அனுமதிக்க முடியாது என இலங்கை வெளியுறவு மந்திரி காமினி லட்சுமண் பெய்ரிஸ் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து, நேற்று பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

இலங்கை தொடர்பாக ஐ.நா. நியமித்துள்ள குழுவை எங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். அந்த குழுவில் உள்ளவர்களுக்கு `விசா' வழங்க மாட்டோம். இலங்கை விசாரணை கமிஷன் சட்டப்படி, ஏற்கனவே ஒரு கமிஷனை அதிபர் ராஜபக்சே நியமித்து இருக்கிறார். எனவே, இலங்கை போரின்போது, சர்வதேச மனித உரிமைகள் மீறப்பட்டனவா என்பது குறித்து விசாரிப்பதற்காக ஒரு குழுவை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி மூன் நியமித்து இருப்பது தேவையற்றது.

ஐ.நா. மனித உரிமைக் குழுவால் எதையும் சாதிக்க முடியாது. தேவையற்ற தலையீடாகவே, இந்த குழுவை நாங்கள் கருதுகிறோம். சொந்தமாகவே உண்மைகளை கண்டறிந்து கொள்ள இலங்கை அரசை சுதந்திரமாக விட வேண்டும்.

இவ்வாறு காமினி லட்சுமண் பெய்ரிஸ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக