25 ஜூன், 2010

ஐ.நா. ஆலோசனைக்குழு இலங்கை வர அனுமதியில்லை


இலங்கையின் இறைமையை சர்வதேசத்திற்கு தாரைவார்க்க முடியாது


ஐ.நா. செயலாளர் நாயகம் பாங் கீ மூனின் ஆலோசனைக் குழு இலங்கை வருவதற்கான அனுமதியை வழங்கப் போவதில் லையென அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாடொ ன்றில் இது பற்றித் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், அதற்கான தேவை இருப்பதாக அரசாங்கம் கருத வில்லை எனவும் குறிப்பிட்டார். ஐ.நா. ஆலோசனைக் குழு விவகாரம், ஜீ.எஸ். பி. சலுகைகளுக்கான நிபந்தனை ஆகியவை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்;

இலங்கை ஒரு இறைமையுள்ள சுயாதிபத்திய நாடு. தேர்தல் மூலம் அமையப் பெற்றுள்ள பலமான அரசாங்கம் காத்திரமான நீதித்துறை எமக்குள்ளது. இதனடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரங்களை சர்வதேச சக்திகளுக்குத் தாரைவார்க்க முடியாது.

நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் தலையிடுவது முறையல்ல. எமது நாட்டின் பிரச்சினைகளுக்கு நாட்டுக்குப் பொருத்தமான வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு. அதற்கு வேறெந்த தலையீடுகளும் அவசியமில்லை.

இலங்கையின் உள்விவகாரங்கள் சம்பந்தமாக ஆராய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர்மட்ட நல்லிணக்கக் குழுவொன்றை நியமித்துள்ளார். அந்தக்குழு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாங் கீ மூன் இதற்கு முன்னரும் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். நவநீதம்பிள்ளை, சர்வதேச யுத்த நீதிமன்றம் தொடர்பாகவும் அறிக்கைகளை வெளியிட்டார். தற்போது இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கான நிபுணத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கின்றது. இக்குழு நியமனம் காலத்துக்குப் பொருந்தாதவை.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. பிரதிநிதி வின் பெஸ் கோவிடம் இது பற்றி நாம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் இத்தகைய தீர்மானத்தை ஏற்கமாட்டோம் என்பதையும் தெளிவு படுத்தினோம். இத்தகைய நிபுணத்துவக் குழுவொன்றிற்கான அவசியம் இல்லை. இது ஐ.நா.வுடன் இலங்கை கொண்டுள்ள உறவிற்குப் பங்கம் ஏற்படுத்திவிடக்கூடாது. இதனால் அவசியமற்ற இந்த நிபுணத்துவ குழுவை நாம் முழுமையாக நிராகரிக் கின்றோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக