25 ஜூன், 2010

ஆஸியின் புதிய பிரதமர் ஈழ அகதிகள் குறித்த கடும்போக்கை மாற்றலாம்

ஈழத் தமிழ் அகதிகளுக்கு புகலிடம் வழங்கும் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் கடும்போக்கு கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

புதிய பிரதமராக நேற்று பதவியேற்றிருக்கும் ஜூலியா கில்லார்ட் தற்போதைய கடும்போக்கைத் தளர்த்துவார் என்று ஆஸியில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈழத்தமிழ் அகதிகள் ஏராளமானோர் வருடாவருடம் கடல்வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வருகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அகதி அந்தஸ்து பெற அருகதையுடையவர்களாவர்.

இதற்கு முன் பிரதமராக இருந்த கெவின் ரூட் தலைமையிலான அரசாங்கம் ஈழ அகதிகள் விவகாரத்தில் கடும்போக்கைக் கடைப்பிடித்து வந்தது.

இதனால் கெவின் ரூட்டுக்கு அவுஸ்திரேலிய மக்களிடையேயான செல்வாக்குக் குறைய ஆரம்பித்திருந்தது. அத்துடன் எதிர்க்கட்சிகள் ரூட்டின் இக்கடும்போக்கைக் கடுமையாக விமர்சித்து வந்தன.

சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களும் அவரைக் கடுமையாக சாடியிருந்தன. இதன் காரணமாகவே தொழிற்கட்சி புதிய பிரதமரை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

கெவின் ரூட்டின் அறிவுறுத்தல்களுக்கு அமைய ஈழ அகதிகளுக்கு விசா வழங்குவதற்கான முன்னெடுப்புக்கள மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றிருக்கும் ஜூலியா கில்லார்ட் இக்கடும்போக்கை தளர்த்துவார் என்று ஆஸியில் இருந்து வெளியாகும் செய்திகள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தில் புதிய பிரதமரிடம் இருந்து சாதகமான சமிக்ஞைகள் வெளியாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் பிரதமராகப் பதவியேற்ற சில மணித்தியாலங்களில் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில், அகதிகள் விவகாரத்தில் அவுஸ்திரேலியாவின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக