ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தியுள்ள குழுவை ஏற்குமாறு இலங்கை அரசை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரிக்க மூன்று பேரடங்கிய குழுவை ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் ஏற்படுத்தியிருந்தார்.
இக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இக்குழுவுக்கு இந்தோனேசியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மர்சுகி டருஸ்மான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் யாஸ்மின் சூகா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் இலங்கைக்கு நேரில் சென்று அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து ஐ.நா. பொதுச் செயலரிடம் அறிக்கை அளிப்பர் என கூறப்பட்டது.
ஆனால் இக்குழுவினரை இலங்கையில் அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ், வியாழக்கிழமை அறிவித்தார். இக்குழுவினருக்கு விசா வழங்கப்பட மாட்டாது என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதனால் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை நீக்கும் வகையில் ஐ.நா. குழுவை அனுமதிக்குமாறும், இதனால் ஏற்படும் சாதக அம்சங்களை இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராயவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் ஏற்கெனவே அதிபர் மகிந்தா ராஜபட்ச தனிக் குழுவை ஏற்படுத்தியுள்ளார்.
இக்குழுவினர் இலங்கை சட்ட விதிகளுக்குள்பட்டு விசாரணை நடத்தி அதற்குரிய தீர்வுகளையும் கண்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கியுள்ள குழு தேவையற்றது, இதனால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.
எனவே இதை அனுமதிக்க முடியாது என்று பெரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக