11 அக்டோபர், 2010

இரண்டு இலட்சத்து 85 ஆயிரம் இடங்களில் ஒரே நாளில் டெங்கு நுளம்பு சோதனை




4,464 பேர் மீது வழக்கு: 11,002 எச்சரிக்கைகள்

டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் (09) டெங்கு நுளம்புகள் பரவக் கூடிய அனைத்து இடங்கள், வீடுகள், மற்றும் மக்கள் வசிக்கும் இடங்கள் என 2 இலட்சத்து 85 ஆயிரத்து 918 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 67 ஆயிரத்து 798 இடங்கள் நுளம்புகள் பரவக் கூடிய இடங்களாக இனங்காணப்பட்டன.

இதில் 11 ஆயிரத்து 02 இடங்களில் டெங்கு நுளம்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதில் 4464 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகமான இடங்கள் வட மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களிலேயே இனங்காணப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 68 ஆயிரத்து 525 இடங்களில் 15 ஆயிரத்து 588 இடங்கள் டெங்கு நுளம்புகள் பரவக் கூடிய இடங்களாக இனங்காணப்பட்டுள்ளன. 2947 இடங்களில் டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் 872 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 17 ஆயிரத்து 655 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 4748 இடங்கள் டெங்கு பரவக் கூடிய இடங்களாக இனங்காணப்பட்டுள்ளன. 1138 இடங்களில் டெங்கு நுளம்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் 725 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

வட மாகாணத்தில் 17 ஆயிரத்து 365 இடங்கள் பரிசோதனைக்குள்ளாகின. இதில் 2391 இடங்களில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களாக இனங்காணப்பட்டன.

988 இடங்களில் டெங்கு நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்ட அதேவேளை அவ்வாறான இடங்களின் உரிமையாளர் களான 102 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காவது தினமான நேற்று (10) நாட்டின் அனைத்து சுடுகாடுகள் உள்ளிட்ட பொது இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக