11 அக்டோபர், 2010

சூப்பர் ஸ்டாரின் குப்பை படம்! பிரபல வில்லன் நடிகர் தாக்கு!!







கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. சூப்பர் ஸ்டார்கள் நடிக்கும் குப்பை படங்களால் மக்களுக்கு என்ன பயன்? என்று பிரபல வில்லன் நடிகர் திலகன் கடுமையாக சாடியிருக்கிறார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் வில்லன் கேரக்டரில் கலக்கிய திலகன் சமீப காலமாக சினிமாவில் நடிக்கவில்லை. அவரை நடிக்க விடாமல் மலையாள நடிகர் சங்கம் மற்றும் முன்னணி நடிகர்கள் இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி :

நான் வேஷம் கட்டிப் பல நாளாயிடுச்சு. எனக்குள்ள இருக்கும் கலைஞன் பெருங்குரல் எடுத்து அழுறான். ஆனால் மலையாளப் படவுலகை ஆட்டி வைக்கிற மாஃபியாக்கள் என்னை நடிக்கவிடாமல் தடுக்கிறாங்க. இதே நிலை தொடர்ந்தா தூக்கில் தொங்குவதுதான் என் இறுதி முடிவு என அறிவித்துவிட்டேன். அப்படி நான் தொங்கினால் அதுதான் ஆசையா சூப்பர் ஸ்டார்களே? உண்மையான கலைஞன் என்றால் உணர்ச்சி வசப்படணும்.

அடித்தால் திருப்பி அடிப்பேன். காரணம், என் நாடி நரம்பெல்லாம் உணர்ச்சிகள்தான் பொங்கி வழியுது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டார்ட் என்ற சத்தத்தைக் கேட்டதும் இந்தத் திலகன் மறைந்து அந்த கேரக்டர்தான் கேமரா முன்னாடி நிற்கும். ஒரே டேக்கில் அந்த ஸீனை அடித்து நொறுக்கிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன். அதைப் பார்த்துக் கைதட்டிய டைரக்டர்ஸ் எல்லாம் இன்னைக்கு என்னை ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்.

விநயனும் ஒரு விஷய ஞானமுள்ள இயக்குநர்தானே? அவரது படத்தில் நடித்ததற்காகத் தடை போடுவது என்ன நியாயம்? கலையை வளர்க்கத்தான் சங்கம் வேண்டுமே தவிர, கலைஞனை அழிப்பதற்கு இல்லை. என் மீது வந்து விழும் கல்லுக்கு எல்லாம் சூத்ரதாரி மம்முட்டி என்று எனக்குத் தெரியும். அவருக்கும் மோகன்லாலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இப்போது சொல்கிறேன்... கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை.

மம்முட்டி அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். மலையாளப் படவுலகம் இன்று சிலரது கைக்குள் சிக்கிச் சின்னாபின்னாமாகிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் எல்லாம் உருப்படாத கதைகளில் நடிக்கிறார்கள். மற்ற மொழி சினிமாக்களை காப்பியடித்து, காப்பியடித்து மலையாள சினிமாவின் உன்னதத்தைக் கெடுத்துவிட்டார்கள்.

ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள். கேரளத்தின் கலாசாரத்தைத் திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் படங்கள் எல்லாம் கேரளவாசிகளுக்கு தேவையில்லாத குப்பைகள்தான்.

கேரள சினிமாக் கலையை அழிப்பவர்களைத்தான் அப்படித் தாக்குகிறேன். அது யாராக இருந்தால் எனக்கென்ன? என் நடிப்பை இந்த நாடறியும். இடையில் எனக்கு உடல் நலம் குறைந்தது உண்மைதான். அதற்காக என்னை புக் பண்ண வரும் டைரக்டர்களிடம், திலகனை புக் செய்தால் கூடவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும். எதற்கு பணத்தை வேஸ்ட் பண்றீங்க? என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். என்னை "அம்மாவில் இருந்தும் தூக்கி எறிந்து விட்டார்கள். சீரியலில் நடிப்பதையும் தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

நாட்டின் சிறந்த கலைஞன் கமல்ஹாசனுக்கு கேரள அரசு விழா எடுக்கிறது. அதில் கலந்து கொள்ள கூடாது என அறிக்கைவிடுகிறார்கள். அப்போது இந்த மலையாள சினிமாவின் பிரம்மாக்கள் எல்லாம் எங்கே போனார்கள். நடிப்பதற்கான எனது வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்து கேரள கலாசாரத் துறை அமைச்சர் பேபியிடம் பலமுறை புகார் சொல்லிவிட்டேன்.

ஆனால், அவர் தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுக்குச் சாதகமாகவே நடக்கிறாரே தவிர, உரிய நடவடிக்கை இல்லை. கொஞ்ச காலம் பொறுப்பேன். எல்லாத் திசைகளும் இப்படி சூனியமாகி விட்டால், பேபியின் வீட்டு முன் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு திலகன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக