11 அக்டோபர், 2010

கொழும்பில் இன்று கறுப்புப் பட்டி போராட்டமும் கண்டனக் கூட்டமும்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் சிறைத் தண்டனை மற்றும் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு ஆகியவற்றுக்கு எதிராக தலைநகரில் இன்று பாரிய கறுப்புப்பட்டி போராட்டத்தை நடத்தவிருப்பதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. கொழும்பு ஹைட்பார்க் மை தானத்தில் இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகும் இந்த கறுப்புப்பட்டி போராட்டம் மற்றும் கண்டனக் கூட்டத்தில் கறுப்பு நிற உடையில் கலந்து கொள்ளுமாறு சகல ஜனநாயக விரும்பிகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

சரத் பொன்சேகாவுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் இந்த நாடே அறிந்துள்ளது. பல வழிகளிலும் பழிவாங்கப்பட்டுள்ள யுத்த வீரரான சரத் பொன்சேகாவை விடுதலை செய்து கொள்வதும் அவரது உரிமைகளைப் பாதுகாகத்துக் கொடுக்க வேண்டியதும் மக்களின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

பொன்சேகாவுக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதிலும் நாம் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம். ஆனாலும் எமது போராட்டங்களையும் மக்கள் சக்தியையும் அரசாங்கம் தடுப்பதற்கு சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இடையூறுகளை ஏற்படுத்தி அடக்கி ஒடுக்கப் பார்க்கின்றது. அரசாங்கத்தின் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் ஜே.வி.பி. அடிபணிந்து போய் விடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நாடு முழுவதிலும் நாம் பொன்சேகாவுக்கு ஆதரவாக மக்கள் மகஜரை தயாரித்து வருகின்றோம். இதுவரையில் அந்த மகஜரில் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் எதிர்க்கட்சிகளும் மாற்றுத்தரப்புக்களும் பொன்சேகாவுக்காக குரல் கொடுத்து வருவதையும் அவரது சிறைத் தண்டனைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருவதையும் காண்கின்றோம். இது உண்மையில் வரவேற்கக்கூடியது.

இருப்பினும் சில கட்சிகள் பொன்சேகாவையும் பாதுகாத்து ஜனாதிபதியையும் பாதுகாக்க முயற்சிக்கின்றன. இது இயலாத காரியமாகும். எம்மைப் பொறுத்தவரையில் பொன்சேகா மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டும். அடுத்ததாக மக்கள் சக்தியுடன் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அந்த வகையில் இன்று திங்கட்கிழமை மாலை 3.30க்கு கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் அரசாங்கத்தின் மோசமான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கறுப்பு போராட்டம் மற்றும் கண்டனக் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். இந்த கறுப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்க முன்வருமாறு சகல ஜனநாயக விரும்பிகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக