11 அக்டோபர், 2010

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்கு 9000 கோடி ரூபா செலவீடு

அம்பாறை மாவட்டத்தின் கடந்த ஐந்து வருட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 9,000 கோடி ரூபாவை செலவிட்டுள்ளது.

மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்றைய தினம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற போதே இச் செலவினங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டன.

இந்நிதியின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் விவசாயம், நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்தி, கல்வி, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் துறைகளில் 53,000 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, ஏ.எல்.எம். அதாஉல்லா, ரிசாட் பதியுதீன், பி. தயாரட்ன, மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நேற்றைய இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர அபிவிருத்தி தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.

அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலகப் பிரிவுகளும் 503 கிராம சேவகர் பிரிவுகளும் உள்ளன. இந்த சகல பகுதிகளையும் உள்ளடக்கியதாக 2016ம் ஆண்டை இலக்காகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து வருட அபிவிருத்திச் செயற்திட்டத்தின் கீழ் விவசாயத்திற்காக பெருமளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. 2936 கோடி ரூபா நிதி இதற்கென செலவிடப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 34,486 விவசாயிகள் நன்மையடைந்துள்ளனர்.

2005ம் ஆண்டில் தேசிய நெல் உற்பத்தியில் 15.38 வீதத்தை அம்பாறை மாவட்டம் பெற்றுள்ளதுடன் 2010ம் ஆண்டில் அது 22.70 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இக்காலகட்டத்தில் 2890 கோடி ரூபாவை அரசாங்கம் உரமானியத்திற்காக செலவிட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்ட மக்கள் முகம்கொடுத்த குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் 2552 கோடி ரூபா செலவில் 600 க்கும் மேற்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மாவட்டத்தின் சமுர்த்தி அபி விருத்தி, கிராமிய பாதைகள் திட்டத்திற்கென தேவைப்படுகின்ற 120 மில்லியன் ரூபாயை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக