11 அக்டோபர், 2010

தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் ஆலயங்கள் அழிப்பு : ததேகூ

தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் ஆலயங்கள் அமைந்திருந்த இடங்கள் அழிக்கப்படுவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. இதனை நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். நாங்கள் அண்மையில் பிரதம மந்திரியைச் சந்தித்துக் கலந்துரையாடினோம். அவர் எதிர்வரும் வாரங்களில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து என்னுடன் சென்று ஆலயங்களைப் பார்வையிடவுள்ளதாகக் கூறியுள்ளார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய 'கடலலையோடு' என்ற இறுவட்டு வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

"இந்துமதம் ஆதிகாலத்தில் தோன்றிய மதம். இதனை வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் யுத்தம், சுனாமி போன்றவற்றால் அழிக்கப்பட் ஆலயங்கள் இன்னமும் புனரமைக்கப்படவில்லை. ஆலயங்கள் இருந்த இடங்கள் இன்னும் ஆக்கிரமிப்புகளுக்குள்ளாகி வருகின்றன.

அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு, அவர்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இதற்கு யாரும் இடமளிக்கக்கூடாது. அத்துடன் விழிப்பாக இருங்கள். நமது இந்து ஆலயங்களில் கோழி, ஆடு போன்ற உயிரினங்களை உயிர்ப்பலி எடுப்பதனை உடனடியாக நிறுத்துதல் வேண்டும். நேர்த்திக்கடன் என்பது வேறு, உயிர்ப்பலி என்பது வேறு" எனத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்,

"அம்பாறை மாவட்ட கச்சேரியில் இனிமேல் நடைபெறும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் எமது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொள்ளவுள்ளார். இது சம்பந்தமான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் இன்று திங்கட்கிழமை பேசவுள்ளோம்.

கிழக்கில் யுத்தத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட கோவில்கள் புனரமைக்கப்படவில்லை என்று கூறுகிறீர்கள். வடக்கில் சென்று பார்த்தீர்களானால் கோவில்கள் இருந்த தடங்களே இல்லை. ஆகவே நாங்கள் எங்களுடைய பூர்வீக விடயங்களில் அக்கறை செலுத்தாமல் விடுகிறோம் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது.

நாங்கள் வாக்குக் கேட்கும் போது அபிவிருத்திகளைச் செய்வோம் என்றோ வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத் தருவோம் என்றோ கூறவில்லை. அதற்காக வாக்களித்த மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

அம்மன் ஆலய பரிபாலன சபைத்தலைவர் எஸ்.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இறுவட்டு வெளியீட்டு விழாவில் பிரதம அதிதிகளாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.யோகேஸ்வரன், பொன். செல்வராசா, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு, கல்லாறு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி எம்.எஸ்.பைசுல் அமீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக