12 ஆகஸ்ட், 2010

மேர்வின் சில்வாவை பதவி விலக்கியமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது – ஐ.தே.க

மேர்வின் சில்வாவை பதவி விலக்கியமை சந்தேகத்தை தோற்றும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவின் அண்மைக்கால நடவடிக்கைகளினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தி அலையை திசை திருப்பும் நோக்கில் அரசாங்கம், இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டிய சம்பவம் குறித்து பிரதி அமைச்சருக்கு எதிராக துரித கதியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேர்வின் சில்வா சட்டத்தை மீறியுள்ளதாகவும் அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெறுமனே பிரதி அமைச்சுப் பதவியை பறித்தமையின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டதாகக் கருதப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வா விவகாரத்தில் அரசாங்கம் நேர்மையாக செயற்படுகின்றதா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி அமைச்சுப் பதவி நீக்கப்பட்டதனைப் போன்றே அவரது பாதுகாப்பு பரிவாரங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும், அவை தொடர்பில் எவ்வி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை வெறும் நாடகமல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதி அமைச்சரின் நடவடிக்கைகளை கண்டிக்கும் நோக்கில் அவரது பதவி பறிக்கப்பட்டதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக