12 ஆகஸ்ட், 2010

ரயில் பயணிகளிடம் கொள்ளை : நால்வர் சந்தேகத்தில் கைது

இரவு வேளைகளில் ரயிலில் பயணிக்கும் மக்களிடம், திடீரென குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எனக்கூறி அவர்களிடமிருந்து பணம், நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டு வந்த நால்வர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் எனத் தம்மை அடையாளப்படுத்தும் வகையில் போலி அடையாள அட்டைகளைக் காண்பித்து இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனப் பொலிஸ் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

பல்வேறு விசேட அதிரடி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் வியாங்கொட ரயில் நிலையத்திலும், கட்டான நகரிலும் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பொல்காவலை, மீரிகம, வியாங்கொட, ராகம, கோட்டை ரயில் நிலையங்களிலும் மக்களிடம் கொள்ளையிட்டு வந்துள்ளனர்.

விசாரணைகளைத் தொடர்ந்து வரும் பொலிஸார், கொள்ளையிடப்பட்ட நகை, பணம், மற்றும் பொருட்களை மீட்பதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக