12 ஆகஸ்ட், 2010

இலங்கைக் கடல் பகுதிக்குள் எல்லை மீறி நுழையும் மீனவர்களை பாதுகாக்க முடியாது: எஸ்.எம்.கிருஷ்ணா




சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் எஸ்.எம்.கிரு
புது தில்லி, ஆக.11: இலங்கை கடல் பகுதிக்குள் எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என்றார் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா.

சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், பாஜக உறுப்பினர் வெங்கைய்ய நாயுடு, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, திமுக உறு1ப்பினர்கள் டி.சிவா, கனிமொழி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் குற்றம்சுமத்தினர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்கதையாகவுள்ளது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை இந்திய அரசு இனிமேலும் சகித்துக் கொள்ளாது என்பதை இலங்கை அரசுக்கு உணர்த்த வேண்டும் என்று ஜெயந்தி நடராஜன் வலியுறுத்தினார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தை இந்திய அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது. தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வெங்கைய்ய நாயுடு குற்றம்சுமத்தினார்.

தமிழர்கள் என்றாலே இலங்கை அரசுக்கு ஒவ்வாமையாகவுள்ளது. இதனால் தான் தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும் என்று திமுக உறுப்பினர் சிவா வலியுறுத்தினார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ தமிழக மீனவர்களை தாங்கள் தாக்கவில்லை என்று கூறி வருகிறது. அப்படியென்றால் தமிழக மீனவர்களை தாக்குவது யார்? என்று கனிமொழி கேள்வி எழுப்பினார்.

எஸ்.எம்.கிருஷ்ணா பதில்: இந்நிலையில் உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை கடல் பகுதிக்குள் எல்லைமீறி நுழையும் தமிழக மீனவர்களை பாதுகாக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்திய பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாகவுள்ளது. இதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார்.

அதேசமயம் சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மீறி அண்டை நாட்டு கடல் பகுதிக்குள் நுழைந்து மீனவர்கள் மீன்பிடிக்க முயன்றால் அது கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.

2008-ல் இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு பிறகு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், கொல்லப்படுவதும் கணிசமாகக் குறைந்துள்ளது. எனினும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு மீண்டும் எடுத்துச் செல்லப்படும். இதுகுறித்து எனது அடுத்த இலங்கை பயணத்தின் போது அந்நாட்டு தலைவர்களிடம் விவாதிப்பேன் என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.

டி.ராஜா கோரிக்கை... 1974-ம் ஆண்டின் கச்சத்தீவு உடன்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்து சார்க் அமைப்பில் குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த எஸ்.எம்.கிருஷ்ணா, கச்சத்தீவு உடன்பாடு என்பது ஒரு தரப்பு உடன்பாடு அல்ல. அது இரு தரப்பு உடன்பாடு. இதனால் இந்த விவகாரத்தில் இந்தியா மட்டும் தன்னிச்சையாக எவ்வித முடிவையும் எடுத்திட முடியாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக