12 ஆகஸ்ட், 2010

மகஸின் சிறையில் இரு கைதிகள் மோதல்: விலக்கச் சென்றவர் அடித்துக் கொலை


வெலிக்கடை, மகஸின் சிறைச்சாலை யில் நேற்றுக் காலை இரண்டு கைதிகளுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் அதனை தடுக்க வந்த இன்னுமொரு கைதி உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் போதைவஸ்து பாவனை குற்றத்திற்காக விளக்கமறியலில் கடந்த 10ஆம் திகதி சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்த மலிந்த பெரேரா எனும் கைதியே உயிரிழந்திருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி. ஆர். டி. சில்வா தெரிவித்தார்.

விளக்கமறியல் கைதியொருவர் மற்றொரு கைதியை இரும்பு கொக்கி யொன்றினால் குத்த முற்பட்டபோதே மோதல் மூண்டுள்ளது. மோதலை தடுக்க முற்பட்ட போதே மலிந்த பெரேரா எனும் கைதியின் தலையிலும் முதுகிலும் இரும்பு கொக்கியினால் பலத்த அடி வீழ்ந்துள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த மேற்படி கைதி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இன்னுமொரு கைதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக நிலவி வந்த பகையே இம்மோதல் மூண்டதற்கு காரணம் என தெரிவித்த சிறைச்சாலைகள் ஆணையாளர் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக