12 ஆகஸ்ட், 2010

புலம்பெயர் தமிழர் நாடு திரும்ப சிறந்த பொறிமுறை அவசியம்

நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன்னாள் இராஜதந்திரி பரிந்துரை
வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி துரிதமாக இயல்புவாழ்க் கையைத் தோற்றுவிக்க வேண்டுமென்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (11) சாட்சியமளிக் கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்விடங்களில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களைக் கட்டம் கட்டமாகக் குறைப்பதுடன், தனியார் கட்டடங்களிலிருந்து இராணுவம் விலக்கிக்கொள்ளப்பட்டு மீள ஒப்படைக்க வேண்டுமென்றும் ஆணைக்குழு முன் நேற்றுக் காலை சாட்சியமளித்த இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியும், முன்னாள் சமாதான செயலகத்தின் பணிப்பாளருமான பர்னாட் குணதிலக பரிந்துரைத்தார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவிருந் தால், வடபகுதி மக்களின் புனர்வாழ்வுப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு அவர்களின் ஜீவனோபாய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். விவசாயம், மீன்பிடி, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளை மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட பர்னாட் குணதிலக, வடக்கில் ஆயுதப் படைகளின் பிரசன்னம் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுவது குறித்தும் மாற்று நடவடிக்கை எடுப்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மீண்டும் சொந்த நாட்டுக்கு வருவதற்குப் பொருத்தமான ஒரு பொறிமுறையை ஏற்படுத்துவதுடன், அவர்களைக் கவரும் வகையில் இரட்டைப் பிரஜாவுரிமை போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமென்றும் பர்னாட் குணதிலக கூறினார். வெளிநாடுகளில் இன்னமும் புலிகளுக்காக நிதி சேகரித்து பிரபாகரன் பெயரில் ரசீது வழங்குகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்கம் பற்றி முன்னாள் சட்டமா அதிபர் சீ. ஆர். டி. சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் முதலாவது பகிரங்க அமர்வு அதன் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில், கொழும்பு 7, ஹோட்டன் பிளேஸில் உள்ள மூலோபாய கற்கைகளுக்கும் சர்வதேச உறவுகளுக்குமான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் முதலாவதாக சாட்சியமளித்த பர்னாட் குணதிலக, போர் நிறுத்த உடன்படிக்கை காலத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிட்டதுடன், நிரந்தரமான தீர்வாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

நாட்டில் நிலவியது ஓர் ஆயுத முரண்பாடு என்று சுட்டிக்காட்டிய பர்னாட் குணதிலக, “கடந்த காலங்களில் சமாதானமாகத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. சமாதானச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்தனர்.

இந்திய மத்தியஸ்தத்துடன் சமாதானத்தை ஏற்படுத்த முயன்ற முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1990 களில் சமாதானத்தை முன்னெடுத்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச ஆகியோரைப் புலிகள் படுகொலை செய்தார்கள். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கொண்ட முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

அதன்பின்னர் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய பிரதமர் புலிகள் இயக்கத்துடன் போர்நிறுத்த உடன்படிக்கையைச் செய்தார். நோர்வே அனுசரணையாளர்கள் லண்டனில் அன்ரன் பாலசிங்கத்துடன் கலந்தாலோசனை நடத்தி தயாரித்த உடன்படிக்கையை இலங்கைக்குக் கொண்டுவந்தனர். உண்மையில் சமாதான உடன்படிக்கையை ரணில் விக்கிரமசிங்க ஆரம்பிக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கதான் ஆரம்பித்தார். இதனை அன்ரன் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்த உடன்படிக்கை முதலில் வெளியான போது, அதில் உள்ள குறைபாடுகள் காரணமாக விமர்சனத்திற்கு உள்ளாகியது. அதிக தடவை புலிகள்தான் உடன்படிக்கையை மீறிச் செயற்பட்டனர்” என்று தெரிவித்த பர்னாட் குணதிலக, ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

புலிகள் இயக்கத்தின் அடித்தளத்தைப் பலவீனப்படுத்தும் முகமாகவே போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அப்போதைய அரசு உடன்பட்டதாகக் கூறிய அவர், புலிகள் இயக்க உறுப்பினர் விடுமுறையில் செல்லவும், நண்பர், உறவினர்கள், காதலர்களைச் சந்திக்கவும் வழி ஏற்படுத்துவதோடு, புலிகளைத் தொடர்ந்து சமாதான மேசையில் தக்கவைப்பதே நோக்கமாகவிருந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

கலாநிதி வீ. நல்லநாயகம்

புலம்பெயர் தமிழரான கலாநிதி வீ. நல்லநாயகம் சாட்சியமளிக்கையில், “புலம்பெயர்ந்து வாழும் இளைய சந்ததியினரைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கின்றார்கள். மொழிகளால்தான் நாம் பிரிந்து இருக்கின்றோம். எனவே, சகல இனத்தவரும் ஒன்றாகக் கல்வி கற்கும் பழைய நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக