13 மார்ச், 2010

அவசர காலச் சட்டத்தை நீக்குமாறு கனடா கோரிக்கை



பெருந்தொகை புலம்பெயர் இலங்கையர்களைக் கொண்டுள்ள கனடா இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது அமுலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தைத் தற்போது நீக்கி விடுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மக்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் கோரியுள்ள கனடா இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகளை விரைவுபடுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.

கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகீஸ்வராவைச் சந்தித்த கனேடிய வெளிவிவகார பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒப்ராய், தமிழ் சமூகத்தினருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் மத்தியில் புரையோடிப் போயுள்ள துன்பதுயரங்களை அரசாங்கம் போக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

30 வருடகால யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நிலையான சமாதானத்தைக் கொண்டுவர நல்லிணக்கம் அவசியமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை கனடடிய அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறது என்று இலங்கை உயர்ஸ்தானிகரை சந்தித்த பின்னர் ஒப்ராய் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மக்கள் அவர்களது சொந்த வீடுகளுக்கு திரும்பியமை குறித்து வரவேற்பு தெரிவத்த ஒப்ராய் எஞ்சியுள்ள சுமார் ஒரு லட்சம் பேரையும் பாதுகாப்பாக மீளக் குடியமர்த்துவதைத் துரிதப்படுத்துமாறு கோரியுள்ளார்.

கடந்த வருடம் யுத்தம் முடிவடைந்ததும் இலங்கைக்கு விஜயம் செய்த ஒப்ராய், தமிழ் மக்கள் வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் செல்ல அனுமதிக்குமாறும் மனிதநேய அமைப்புக்களுடனும் நிவாரண அமைப்புக்களுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறும் அரசாங்கத்திடம் கோரியிருந்தார்.

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிடுமாறு கோரிய ஒப்ரோய், யுத்தம் முடிவடைந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகளை நியாயப்படுத்துவதற்கு எவ்வித காரணமும் இல்லை என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக