யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை தடுக்க அரசாங்கம் சகல நடவடிக்கை களையும் எடுத்துள்ளது. அங்குள்ள மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்படும் என பிரதமர் டி.எம். ஜயரத்ன கூறினார்.
ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்தளவு சம்பவங்களே அங்கு இடம்பெற்றுள்ளதாகக் கூறிய அவர், இவற்றை தடுப்பது குறித்து இராணுவத்தரப்பினருடன் ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.
யாழ். குடாவில் இடம்பெறும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி, எம். சுமந்திரன் இது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்தார்.
பிரதமர் மேலும் கூறியதாவது, உலக நாடுகளில் நாளுக்கு நாள் பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெறுகின்றன. அந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் குறைந்தளவு சம்பவங்களே இடம்பெற்றுள்ளன. இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்தளவு வன்முறைகளே நிகழ்ந்துள்ளன.
கடந்த வருடம் நவம்பர் 10 ஆம் திகதி முதல் இந்த வருடம் ஜனவரி மாதம் வரை 16 சம்பவங்களே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன. அதற்காக நாம் இதனை குறைத்து மதிப்பிடவில்லை.
கடந்த 30 வருட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களுடன் பார்க்கையில் யானையின் வாலில் உள்ள ஒரு முடியின் அளவு சம்பவங் களே இங்கு இடம்பெற்றுள்ளன. அந்த சிறு சம்பவங்களையும் முற்றாக ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 3 ஆயிரம் இளைஞர் களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது.
யாழ். குடாநாடு, கிழக்கு மாகாணங்கள் மட்டுமன்றி ஏனைய பகுதிகளிலும் வன்முறைகள் நிகழ்கின்றன. அவற்றை ஒழித்து பயமின்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாகும்.
உலக நாடுகளில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் அசம்பாவிதங்கள் தொடருகின்றன. இங்கு சிறியளவான சம்பவங்கள் நடந்தாலும் கூட அதற்கு இடமளிக்க முடியாது.
இது தொடர்பில் ஜனாதிபதி வாராந்தம் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து ஆராய்ந்து வருகிறார். இதற்கு முடிவு கட்டுவது குறித்து தினமும் கவனம் செலுத்தப்படுகிறது.
யாழ். குடாவிலும் கிழக்கிலும் சிறந்த தமிழ் மக்கள் வாழ்கின்றனர். சிறு பகுதியினரே தவறு செய்கின்றனர். ஆனால் நாட்டு மக்களில் ஒருவருக்காவது பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.
சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி இலங்கையர் என்றே நாம் சிந்திக்க வேண்டும்.
இலங்கையிலுள்ள ஒவ்வொரு அங்குலமும் சகல மக்களுக்கும் உரிமையானதாகும். அனைத்து மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை கட்டியெழுப்புவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக