21 ஜனவரி, 2011

பொன்சேகாவின் மனு மீதான விசாரணை 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனு மீதான விசாரணைகள் ஐந்து நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அவரின் ஆணைகோரும் மனு மீதான விசாரணையை மே மாதம் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.

30 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்த 2ஆவது இராணுவ நீதிமன்றின் தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து சரத் பொன்சேகா மேன்முறையீடு செய்துள்ளார். இந்த மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் நீதிபதிகளான எரிக் பஸ்நாயக, உபாலி அபேவர்த்தன ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், பெப்ரவரி 21ஆம் திகதிக்கு முன்னர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும்படி பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் பணித்தது. இதேவேளை, மனுதாரரை மார்ச் 4ஆம் திகதிக்கு முன் மறுப்பு சத்தியக்கடதாசிகளை தாக்கல் செய்யும்படி பணித்தது.

நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறும் தினங்களில் மனுதாரரான சரத் பொன்சேகாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரவேண்டும் என நீதிமன்றம் பணித்தது.

முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை, 2 ஆவது மற்றும் 4 ஆவது பிரதிவாதிகளால் தன்னை இரண்டாவது இராணுவ நீதிமன்றில் குற்றவாளியாகக் கண்டதை எதிர்த்தும், 2 ஆவது மற்றும் 4 ஆவது பிரதிவாதிகளால் நடத்தப்பட்ட 2 ஆவது நீதிமன்றின் முழுச்செயற்பாட்டையும் செல்லுபடியற்றது என ஆக்கக்கோரியும் 2 ஆவது மற்றும் 4 ஆவது பிரதிவாதிகளால் தனக்கு விதிக்கப்பட்ட 30 மாத கால சிறைத் தண்டனையையும் செல்லுபடியற்றதாக்கக் கோரியும் மேல்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக