21 ஜனவரி, 2011

வீடுகளை நிர்மாணிக்க கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அனுமதி வேண்டும்’






நாட்டில் எப்பாகத்திலும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அனுமதியைப் பெறவேண்டும். இத்திட்டம் அடுத்த வாரத்தில் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டு உள்ளூராட்சி சபைகள் ஊடாக அமுல்படுத்தப்படுமென அனர்த்த நிவாரண அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதில் அவர் மேலும் கூறியதாவது,

நாடு முழுவதிலும் வீடுகளை நிர்மாணிப்பதற்காக மாநகர சபைகள், பிரதேச சபைகளே அனுமதி வழங்கி வந்தன. ஆனால் அனர்த்தம் பற்றிய சான்றிதழ் வழங்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் வீடுகளை நிர்மாணிப்போர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும். இதற்கான சட்டமூலத்தை அனர்த்த நிவாரண அமைச்சு தயாரித்து அமுல்படுத்த உள்ளது.

ஏற்கனவே இயற்கை அனர்த்தங்கள் இடம்பெறும் பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடுகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அடையாளம் கண்டுள்ளது. இவர்களுக்கான மாற்று காணிகள் இனம் காணப்பட்டு அவற்றில் வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படும்.

கடந்த வாரம் பெய்த மழையினால் கிழக்கு மாகாணம், பொலன்னருவை, அநுராதபுரம் போன்ற பிரதேசங்களில் 24, 966 வீடுகள் முற்றாகவும், பகுதியாகவும் அழிந்துள்ளன.

இவ்வீடுகளை மீள நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அனர்த்த நிவாரண அமைச்சு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்குரிய நிதியை வழங்க உள்ளது. அத்துடன் பொருளாதார அமைச்சு, மகாவலி அமைச்சு, சில அரச சார்பற்ற நிறுவனங்கள் நிதி உதவி அளிக்க இணக்கம் தெரிவித்துள்ளன என அமைச்சர் தெரிவித்தார். கடந்த வாரம் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மட்டக்களப்பு மாவட்டமும், அம்பாறை மாவட்டமுமே வெகுவாகப் பாதிக்கப்பட்டன. அண்மைய அனர்த்த அறிக்கையின்படி மட்டக்களப்பில் 14 4081 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 22 பேர் இறந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார்.

4060 வீடுகள் முற்றாகவும், 8989 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. 10 அகதி முகாம்களில் 515 குடும்பங்கள் தங்கியுள்ளனர்.

அதேபோன்று அம்பாறையில் 120732 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 6 அகதிமுகாம்களில் 486 குடும்பங்கள் தங்கியுள்ளனர். 1148 வீடுகள் முற்றாகவும் 4674 வீடுகள் பகுதி அளவிலும் சேதமுற்றுள்ளன. இதேபோன்று திருகோணமலை, பொலன்னருவை, அநுராதபுரம் போன்ற மாவட்டங்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக