21 ஜனவரி, 2011

ஏப்ரல் மாத இறுதிக்குள் எஞ்சியோர் மீள்குடியேற்றம்


வவுனியா நலன்புரி முகாம்களில் எஞ்சியுள்ள சுமார் 20 ஆயிரம் அகதி மக்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குள் மீள்குடியேற்றவே முயற்ச்சிக்கின்றோம். நிலக்கண்ணிவெடிகளே மீள்குடியேற்றத்துக்கு தடையாக அமைந்துள்ள பிரதான காரணியாகும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மிக அதிகமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர். தற்போதைய நிலைமையில் சுமார் 20 ஆயிரம் அகதி மக்களே எஞ்சியுள்ளனர்.

இந்நிலையில் முகாம்களில் எஞ்சியுள்ள மக்களை ஏப்ரல் மாதம் 31க்குள் மீள்குடியேற்றிவிடவே முயற்சிக்கின்றோம். இடம்பெயர்ந்த மக்களை விரைவில் மீள்குடியேற்றவேண்டும் என்பதே எமது ஆர்வமாகும்.

ஆனால் நிலக்கண்ணிவெடிகளே இந்த செயற்பாட்டில் பிரதான தடையாகவுள்ளது. நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாக பிரதேச செயலகம் எங்களுக்கு உறுதிபடுத்தவேண்டும். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் சான்றிதழ் பெறப்பவேண்டியதும் அவசியமாகும்.

அதன் பின்னரே குறிப்பிட்ட பிரதேசங்களில் மக்களை குடியேற்ற முடியும். எனவே நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படும் வரையே நாங்கள் காத்திருக்கின்றோம். இதேவேளை மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை முடியுமானவரை நிறைவேற்றி வருகின்றோம்.

கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம். அமைச்சுக்கு இதுவரை 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்க்பபட்டுள்ளது. தேவைப்படின் மேலும் நிதியை பெற முடியும். தற்போது கிடைத்துள்ள நிதியை ஒவ்வொரு மாவட்டத்துக்குமாக பிரித்து செலவிடவுள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக