கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் நிவாரணங்களை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொருளாதார பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தினகரனுக்குத் தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக கிழக்கில் மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்துறையில் பத்தாண்டு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், இந்த நிலைமையின் கீழ், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழான உலருணவு நிவாரணத்தை ஆறு மாத காலத்திற்கு வழங்குவது பற்றி ஆராய்வதாகக் கூறினார்.
நிவாரணம் வழங்குவதற்காக ஏற்கனவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் 55 மில்லியன் ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், இதன் மூலமாக மேற்கொள்ளப்படும் நிவாரண உதவிகள் கிரமமாக மக்களைச் சென்றடைகின்றனவா என்பதை அறிய கிழக்குக்கு நேரடியாகச் சென்று அறிந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, பகுதி அளவு வீடுகள் சேதமடைந்துள்ள சுமார் 3500 குடும்பங்களுக்கு உடனடியாக உதவி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. இதற்கென முதற்கட்டமாக 50 மில்லியன் ரூபாவை வழங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முடிவு செய்துள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்ட கிழக்கு மக்களுக்கு இந்தப் பெருமழை வெள்ளம் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அவர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் ஊடாக ஆராய்ந்து வருவதாகவும் பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக