29 நவம்பர், 2010

கிருஷ்ணாவுடனான தமிழ்க் கூட்டமைப்பு, அரங்கம் ஆகியவற்றின் சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சந்தித்து பேச இருந்த போதிலும் இந்தச் சந்திப்புக்கள் இறுதி நேரத்தில் ரத்துச்செய்யப்பட்டுள் ளன. நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமையினாலேயே இந்தச் சந்திப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டதாக குறித்த கட்சிகளுக்கு இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கை வந்திருந்த கிருஷ்ணா, யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மற்றும் அங்கு ஏற்பாடாகியிருந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், அதனைத் தொடர்ந்து தமிழ்க்கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலநிலை மாற்றம் காரணமாக அன்று மாலை நடைபெறவிருந்த நிகழ்வுகள், நேற்று ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டன. இதன் பிரகாரம் அம்பாந்தோட்டையில் புதிதாக இந்திய கிளை தூதுவர் ஆலயம் திறந்து வைப்பதற்கென அமைச்சர் கிருஷ்ணா நேற்று அங்கு சென்றிருந்தார். இதுவே சந்திப்பு இடம் பெறாமைக்கான காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று காலை அம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்த எஸ்.எம். கிருஷ்ணா அங்கிருந்து நேரடியாக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று நாடு திரும்பியுள்ளார்.

இதேவேளை தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் நேற்று கொழும்பில் கூடி கிருஷ்ணாவைச் சந்தித்து மகஜர் கொடுப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இறுதி நேரத்தில் இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து மகஜரை கையளிக்க முடியாத நிலை அரங்கத்தினருக்கு ஏற்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக