29 நவம்பர், 2010

இந்தியா, இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி எஸ்.எம். கிருஷ்ணா


இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை புது வீதியில் இந்திய துணைத் தூதரக அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது, இலங்கை, இந்தியாவின் தெற்காசிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும். 2000 ஆம் ஆண்டில் அமுலுக்கு வந்த இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் எட்டு ஆண்டுகளில் மொத்த வர்த்தகப் புரள்வு ஐந்து மடங்காக அதிகரித்தது.

இந்தியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி சென்ற வருடத்திலிருந்து 50 சதவீதத்திற்கு கூடுதலாக அதிகரித்தது. இலங்கையின் நான்கு பாரிய முதலீட்டாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் இலங்கையின் முதலீடுகளும் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியை அடைந்துள்ளன. எங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வடக்கு, தெற்கு உட்பட நாடுபூராவும் வளர்ச்சியடைந்துள்ளது.

என்னுடைய நாட்டுடன் நீண்ட வரலாற்று ரீதியான பிணைப்பினைக் கொண்ட ஒரு தேசத்துடனான இணைப்பை வலுவாக்கும் அவாவின் பிரதி பலிப்பாகும். சமய, கலாசார மற்றும் மொழி சம்பந்தப்பட்ட எமது இரு நாடுகளின் பிணைப்பானது பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது.

இலங்கையும் இந்தியாவும் சமய அனுஸ்டானங்களில் ஒத்த கொள்கைகளை யும், இணைப்புக்களை உண்டாக்கியுள்ளன. பிரமாண்டமான ஆயிரம் தூண்களையுடைய விஷ்ணு கோயில் முந்திய காலத்தில் தேவேந்திர முனையில் இருந்துள்ளது. இன்னுமொன்றையும் நாங்கள் மறக்க முடியாது. அது இந்துத் தமிழர்களும், பெளத்த சிங்களவர்களும் ஒரே இடத்தில் வழிபடும் முருகக் கடவுள் அல்லது ஸ்கந்த என்றழைக்கப்படும் தெய்வம் கோயில் கொண்டுள்ள கதிர்காமமாகும்.

எமக்கிடையேயுள்ள தொடர்புகள் பலதரப்பட்டவையும் சரித்திர ரீதியானவையுமாகும். எமது நட்பினதும் ஒத்துழைப்பினதும் முழுமையான ஆற்றலின் முழுமையான பிரயோசனத்தை பெற்றுக்கொள்வதே எங்கள் முன்னுள்ள சவாலாகும். யுத்தம் முடிவடைந்ததுடன் அதற்கான நேரம் வந்துள்ளது என நான் நம்புகிறேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இரு தரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கும் எமது இணைப்புக்களையும் பழைமை வாய்ந்த கலாசாரப் பிணைப்புக்களையும் புத்தூக்கம் பெறச் செய்யவும் பொருளாதார கடப்பாடுகளை துரிதப்படுத்தவும் எமது பிரதமரும் ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அம்பாந் தோட்டையையும் அதன் சுற்றுப்புறங்களை யும் பாரிய பிராந்திய மையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுளார். எனவே தென்பகுதியில் ஒரு துணைத் தூதரக அலுவலகத்தை திறப்பதற்கு தீர்மானித்ததுடன் அதை அம்பாந்தோட்டையில் திறப்பதானது வர்த்தகம், வணிக முதலீடுகள், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளில் இப்பிராந்தியத்துடன் இந்தியாவுக்குள்ள இறுக்கமான பிணைப்புக்களை கட்டியெழுப்புவதற்காகவே ஆகும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக