29 நவம்பர், 2010

டொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல் முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: பாக்.ஜனாதிபதி

அமெரிக்க டொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளும் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாடுகளுக்கிடையே பண்டமாற்று முறைமையை ஏற்படுத்தி அபிவிருத்தி காண வேண்டும் என்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸீப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸீப் அலி சர்தாரியை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹில்டன் ஹோட்டலில் பிரதமர் டி.எம். ஜயரத்ன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே பாகிஸ்தான் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது மேலும் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி,

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நீண்ட காலமாக ராஜதந்திர உறவுகள் இருந்து வருகிறது. அதனை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். இங்கு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கினோம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அமெரிக்க டொலர்கள் மூலம் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொண்ட யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

அதற்கு பதிலாக எம்மைப் போன்ற நாடுகள் பண்டமாற்று முறைமை ஊடாக அபிவிருத்தியின் இலக்குகளை நோக்கிச் செல்ல வேண்டும். இலங்கையின் நிர்மாணப் பணிகளுக்கு தேவையான இரும்பு மற்றும் சீமெந்து உட்பட தேவையான பொருட்களை பாகிஸ்தானால் வழங்க முடியும். மேலும் இலங்கையில் சீனி உற்பத்தியை மேம்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் நாம் தயாராக உள்ளோம்.

இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உடன்படிக்கையினை பலப்படுத்தி வர்த்தக அடித்தளமொன்றை ஏற்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக