29 நவம்பர், 2010

முன்னை நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஆதவனின் விசேட செய்தி வன்னியிலிருந்து


புலம்பெயர் தேசங்களில் எமது பெயரால் நீங்கள் நடாத்தும் இழிசெயலை நிறுத்துங்கள் என முன்னாள் புலி ஒருவர் தனது வேண்டுதலை கே.பி யின் இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளார். நபரின் பதிவில் புலம்பெயர் தமிழரின் புலித்தொழில் சார்பாக விரிவாக விபரிக்கப்பட்டுள்ளதுடன் , பிரபாகரனை தமிழர்கள் தலைவர் என ?ஏற்றுக்கொள்வதாயின் பிரபாகரன் இறுதி நேரத்தில் புலிகளியக்கத்தின் புலம்பெயர் தலைவராக கே.பி யை நியமனம் செய்திருந்ததையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என வக்காலத்துவேறு வாங்கியுள்ளார். குறிப்பிட்ட பதிவில் புலிகள் தமிழ் மக்களுக்காக போராடியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். புலிகள் மக்களுக்காக போராடினார்களா அன்றில் தமது சொந்த தேவைகளுக்காக போராடினார்களா என்பதற்கு குறிப்பிட்ட முன்னாள் புலியின் பதிவே சான்று. புலிகள் இவ்வாறு காலத்திற்கு காலம் தமது இழிசெயல்களை மறைப்பதற்காக மாறி மாறி நிறம்மாறும் விலங்குபோன்று மற்றவர் மீது குற்றம் சுமத்துவது வரலாற்றினூடாக கண்டிருக்கின்றோம்.

அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

முன்னைய கட்டுரையில் புலம்பெயர் சூழலில் மாவீரர் தினத்தை நினைவு கொள்ளுவதிலுள்ள போலித்தனங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். மீண்டும் அது குறித்து மேலும் சில விடயங்களை எங்கள் புலம்பெயர் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றோம். சீனாவில் இப்படியொரு கருத்துண்டுமரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லைபெரும்பாலும் எங்களுடைய நிலைமையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். உங்களது செயல்கள் எங்களது மௌனத்தை கலைக்கிறது. நாங்கள் சாவை உதைத்துக் கொண்டு வாழ்வதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். தினமும் செய்திகளைப் படித்து, அது குறித்தெல்லாம் விவாதம் செய்யுமளவிற்கு, மனதிலும் உடலிலும் எங்களுக்கு தென்பில்லை நன்பகளே! ஆனாலும் இனியும் நாங்கள் மௌனமாக இருந்தால் நீங்கள் எங்கள் நிர்வாணம் மறைக்கும் கோவணங்களையும் விலைபேசத் தயங்கப் போவதில்லை ஏனெனில் உங்களது தேவையெல்லாம் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் மட்டுமே. எனவே இனியும் அமைதி காப்பது சரியல்ல என்பதை உணர்ந்தே இதனை பதிவு செய்ய விழைகின்றோம். பொறுமைக்கும் ஒரு எலை உண்டல்லவா!

சமீப நாட்களாக, நாங்கள் அவதானித்து வருகின்ற சில சம்பவங்களை முன்னிறுத்தி விவாதிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

எங்கள் மக்களும், எங்கள் சரணடைந்த போராளிகளும் அடுத்த வேளை உணவுக்காக கையேந்திக் கொண்டிருக்கும் போது, நீங்கள் புலம்பெயர் நாடுகளில், எங்கள் மரணமடைந்த போராளிகளை நினைவு கொள்வதாக அறிவிக்கின்றீர்கள். இறந்து கொண்டிக்கும் எங்கள் உறவுகளைக் காப்பாற்ற முடியாத உங்களது சுயநலத்தையும், சந்தர்ப்ப வாதத்தையும் எண்ணி ஆரம்பத்தில் மனம் நொந்திருந்தாலும், சரி எங்கள் உடன்பிறப்புக்கள் போல் வாழ்ந்த சகோதரர்களையும், சகோதரிகளையும்தானே நினைவு கொள்ளுகின்றீர்கள் என்று உள்ளுர மகிழ்ந்தோம். நாங்கள் பசியோடும் வேதனையோடும் இருந்த போதும் அவர்களது தியாகம் இப்படியாவது மக்களால் நினைவு கொள்ளப்படுகிறதே என்பதையெண்ணி மகிழ்சியடையாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அது கூட உண்மையல்ல உங்கள் பணம் சம்பாதிக்கும் பேராசையின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் என்பதை அறிந்த போது எங்களால் எப்படி அமைதியாக இருக்க முடியும். போராட்டம் நடந்து கொண்டிந்த காலத்திலும் அதன் வலிகளை எந்தவகையிலும் அனுபவித்தறியாத சிலர் புலம்பெயர் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டை வியாபாரமாக்கினீர்கள். உங்களைப் போன்றவர்களின் கேவலமான செயற்பாடுகளை அறிந்திருந்த போதும், நாங்கள் எங்கள் மக்களுக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டோம். இன்று ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்த பின்னர் போராட்டம் முற்றுப்பெற்று விட்டது. எங்கள் போராட்டம் ஓய்தாலும் உங்கள் பணம் சம்பாதிக்கு சூதாட்டம் மட்டும் இன்னும் ஓயவில்லை. போராட்ட காலத்தில் போராட்டத்தை விற்றீர்கள், இன்று அதில் இறந்தவர்களின் தியாகங்களை ஏலம் போட்டு விற்கிறீர்கள். இதனை மனச்சாட்சியுள்ள எந்த மனிதனால் சகித்துக் கொள்ள முடியும்? உங்களது ஊடக பலத்தாலும், அடியாள் பலத்தாலும் இந்த உண்மையை புலம்பெயர்ந்த சாதாரண மக்கள் அறியாத வண்ணம் நீங்கள் தடுத்து வைத்திருக்கலாம், ஆனாலும் தங்கள் மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் நல்ல மனிதர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த விடயங்களை பகிரங்கமாகப் பேசுகின்றோம். எங்களின் இந்தக் குரல்கள், நல்லுள்ளம் கொண்ட ஒரு சிலரையாவது உசுப்பும், செயலுக்கு தூண்டும்; என்பதில் இம்மியளவும் எங்களுக்கு சந்தேகமில்லை.

ஏதோ நடந்துவிட்டுப் போகட்டுமே என்று எங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஏனென்றால் உங்களது சூதாட்டத்தால் கேவலப்படுத்தப்படுவது எங்கள் சகபோராளிகளின் தியாகங்கள், பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது எங்கள் மக்கள். அவர்கள்தான் போராட்டத்தால் எல்லாவற்றையும் தொலைத்து உருக்குலைந்து போனவர்கள். ஒரு காலத்தில், விருந்தோம்பல் என்றால் வன்னி என்று சொன்ன காலம் போய் பசி,பட்டினி. நோய் என்றால் வன்னி என்று சொல்லும் நிலைமை உருவாகியிருக்கிறது. இப்படியொரு நிலைமையில், தொடர்ந்தும் எங்களைக் காட்சிப் பொருளாக்கி அரசியல் செய்யும் உங்கள் கேவலமான செயல்களை எங்களால் அனுமதிக்க முடியாது. எங்களால் மட்டுமல்ல, மனிச்சாட்சியுள்ள எந்தவொரு புலம்பெயர் தமிழரும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே நாங்கள் நம்புகிறோம்.

இன்று பலகோடி ரூபாய் செலவில், மாவீரர் தினக் கொண்டாட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். கொண்டாடுவதற்கு இது மகிழ்சிக்குரிய விடயமா அல்லது திருவிழாக் கோலம் கொண்டு அனுஸ்டிப்பதற்கு இதென்ன கோயில் நிகழ்வா? பின்னர் எதற்கு இந்த ஆடம்பரங்கள்? யாருடைய நன்மைக்காக இது மேற்கொள்ளப்படுகிறது? எங்கள் தன்னலமற்று இறந்த, அந்த போராளிகள் மீது உங்களுக்கு உண்மையிலேயே ஈடுபாடிருந்தால், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அவர்களை நினைவு கொண்டிருக்க முடியும். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யவில்லை ஏன்? பதில் பணம் சம்பாதிக்க வழி இல்லாமல் போய்விடும் என்பதுதானே! உண்மையில் இதற்கும் மக்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டிற்கும் ஒரு தொடர்புமில்லை என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இவ்வாறான இழிவுகள் ஒருபுறம் என்றால்;, மறுபுறம் யார் யாரோ, இம்முறை மாவீரர் தின உரை ஆற்றவுள்ளதாக பிறிதொரு நகைச்சுவையான செய்தியும் வெளிவந்து கொண்டிருகிறது. இதுவும் நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று எமது கடந்தகாலத்தை இழிவுபடுத்தும் செயல்தான்.

ஒருவகையில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான மாவீரர் தின நிகழ்வுகள் மேலும் உருத்திரகுமார் உரை நிகழ்த்தும் கதையெல்லாம், கோடாம்பாக்க தமிழ் சினிமாவின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு ஒப்பானது. அங்கு இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் இருக்கும் உணர்வுகளை கிளறுவதன் மூலம் பணம் சேர்கிறது. இங்கு, எங்கள் மக்கள், போராளிகள் மீதும் அவர்களது தன்னலமற்ற அர்ப்பணிப்பு மீதும் கொண்டிருக்கும் உள்ளார்ந்த உணர்வை ஆதாரமாகக் கொண்டு உங்கள் பணம் பெருகுகிறது. அந்த தன்னலமற்ற மனிதர்களை முதலீடாகக் கொண்டு உங்களது குடும்பங்கள் செல்வச் செழிப்பில் வளர்கிறது. இப்படியொரு அவலம் உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளில் எங்குமே கானக்கிடைக்காத ஒன்று. உலகில் பல தேசங்களில் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் சிலதே வெற்றி பெற்றிருக்கின்றன. தோல்வியடைந்த இடங்களில் எங்கும் இது போன்றதொரு கேவலமான அநீதி போராடிய மக்களுக்கு, அந்த மக்களின் ஒரு பகுதியினரால் மேற்கொள்ளப்பட்டதில்லை. சொந்த உறவுகளையே அந்த மக்களின் ஒரு பகுதியினர் போராட்டத்தின் பேரால் ஏமாற்றி பிழைக்கும் அவலத்தை இங்குதான் நாம் கான்கிறோம்.

புலம்பெயர் உறவுகளே! போராட்டம் பற்றியும் அதன் முடிவு பற்றியும் பேசுவதற்கும் உரித்துடைவர்கள் ஈழத்திலேயே இருக்கின்றனர். எந்தவொரு முடிவும் ஈழத்தில் இருந்தே எடுக்கப்படும். அரசியல், அடையாளம் அனைத்தும் நாங்கள்தான். எனவே நீங்கள் அங்கு எடுக்கும் பிழையான உணர்ச்சி வேக முடிவுகள் எங்களையே பாதிக்கும் என்பதை உணர்ந்து செயற்படுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எங்களைப் பாதிக்கும் போது அதில் தலையிடுவது எங்களைப் பொருத்தவரையில் தவிர்க்க முடியாத ஒன்றாகும் ஏனெனில் அது எங்களின் உயிர்வாழ்தலோடு சம்மந்தப்பட்டது. இன்று இன்னொரு கதையும் சிலர் சொல்ல முற்படுகின்றனர். ஈழத்தில் சிறையுண்டு கிடக்கும் போராளிகள் எல்லாம் அரசாங்கத்தின் முன் கையுயர்த்தியவர்கள், கோழைத்தனமாக சரணடைந்தவர்கள், அவர்களுக்கு போராட்டம் பற்றிக் கதைப்பதற்கு தகுதியில்லை என்றவாறும் சில அபிப்பிராயங்கள் உலவுகின்றன. அவ்வாறாயின் 17ஆம் திகதி சரணடைந்து பின்னர் ஏதோ ஊழல்களின் துணையில் தப்பியோடியவர்களை எந்தக் கணக்கில் சோப்பது. போராட்டத்தின் வலியையே உணராது இடைத்தரகர்களாக இருந்த வியாபாரிகள் தமிழ்த் தேசியம் பேசுவதை என்னவென்று சொல்வது. சமீபத்தில் உருத்திரகுமாரன் கொடுத்த நேர்காணல் ஒன்றில், களத்தில் இருக்க வேண்டியதில்லை ஒரு புரிந்துனர்வுடன் பணியாற்றினால் போதுமானது என்னும் தொனியில் பேசியிருந்தார். இதற்கு திலகர் முன்னர் களத்துடன் தொடர்பற்று வெளிநாட்டில் பணியாற்றியதையும் அதனை 'மேதகு' அங்கீகரித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். முன்னர் பிரபாகரன், குறிப்பிட்டதொரு சூழலில் சொன்ன விடயத்தை தனது இன்றைய தான்தோறித்தனமான, சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளுக்கான நியாயமாகக் காட்டிக் கொள்ள முற்படுகின்றார் உருத்திரா. பிரபாகரன் சொன்னவற்றிற்கெல்லாம் கட்டுப்படுவது உண்மையாயின் அவர் இறுதியாக அமைப்பின் சர்வதேச பொறுப்புக்கள் அனைத்தையும் ஒப்படைத்தது கே.பியிடம் அல்லவா, அப்படியாயின் போராட்டம் அரசியல் அனைத்தையும் தீர்மானிக்கும் தகுதி கே.பிக்கு மட்டுமல்லவா உண்டு. இங்கு உரத்திரகுமாரனோ அல்லது புலம்பெயர் சூழலில் இரவு அரசியல் செய்யும் நபர்களோ, அனைவருமே ஈழத்து மக்களையும் போராட்டத்தின் மீதும் அதன் தலைமை மீதும் பற்றுக் கொண்டிருந்த புலம்பெயர் மக்களையும் ஏய்த்துப் பிழைக்கும் பித்தலாட்டமொன்றில் ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது.. உருத்திரா தன்னை நியாயப்படுத்துவதற்கு திலகரின் கடந்த காலத்தை புரட்டுகிறார் ஆனால் திலகரின் மனைவி, பிள்ளை இப்போதும் கிளிநொச்சியில் சாப்பிட வழியின்றி இருப்பதை மறந்துவிட்டார். நாம் மேலே குறிப்பிட்டது போன்று. ஈழத் தமிழர்கள் எதிர்காலத்துடன் தொடர்புபட்ட எந்தவொரு விடயத்தையும் களத்தில் நிலைகொண்டு இருப்பவர்களே எடுக்க முடியும். அதுதான் சரியானதும், பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புவதும். வெளிநாடுகளில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் செய்யலாம் என்றால் தீபன். சொர்ணம், ஜெயம் இப்படியான தளபதிகள் எல்லாம் உயிரை மாய்த்திருக்கத் தேவையில்லையே! எல்லோரும் குளிருக்கான அங்கிகளைப் போட்டுக் கொண்டு அமெரிக்காவிலும், நோர்வேயிலும் இருந்து போராடியிருக்கலாமே. இத்தனை அழிவுகளையும் வேதனைகளையும் எங்கள் மக்களும் சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காதே. தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், கேக்கிறவன் கேனயன் என்றால் எல்லாம் சொல்லலாம், அது மாதிரித்தான் இருக்கிறது உருத்திரகுமார்களின் கதை.

எனவே இனியாவது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இவ்வாறான செயல்களை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களும் போராளிகளும் இது குறித்து தெளிவாகவே இருக்கின்றனர். இப்போது தெளிவடைய வேண்டிய பொறுப்பில் புலம்பெயர்
மக்கள்தான் இருக்கின்றனர். அவர்களின் அறியாமையை, உண்மையான ஈடுபாட்டை இவ்வாறான அரசியல் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றனர்.

நாங்கள் உங்களைச் சிந்திக் கூடாது என்று கூறவில்லை. நாங்கள் உங்களை செயற்படக் கூடாது என்று கூறவும் இல்லை. ஆனால் உங்கள் செயற்பாடுகள் எங்களின் வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் அமைய வேண்டுமென்றே கூறுகின்றோம். அது வீழ்ந்து கிடக்கும் எங்களின் ஆயிரக்கணக்கான போராளிகளின் வாழ்வை புதுப்பிப்பிதாக அமைய வெண்டுமென்றே கூறகின்றோம். அங்கவீனமடைந்த, முகங்கள் சிதைந்த ஆண் பெண் போராளிகளின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென்றே கூறுகின்றோம். அவ்வாறில்லாது, மீண்டும் எங்களின் குருதி பார்த்து வசனம் சொல்லும் ஆசையை கைவிடுங்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் ஒப்பாரிச் சத்தம் கேட்க ஆசைப்படாதீர்கள் என்றே சொல்லுகின்றோம். எங்கள் பேச்சின் எல்லை இவ்வளவுதான். தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். எங்கள் களமாடி வீழ்ந்த பெண் போராளி கப்டன் வானதியின் கவிதை வரிகள் இவை – 'எழுதாத என் கவிதையை எழுங்களேன். எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால், எழுந்துவர என்னால் முடியவில்லை' – எங்களாலும் எழுந்து வர இயலவில்லை உறவுகளே! மழைக் காலம் என்பதால், எங்கள் பிள்ளைகளுடன் ஓதுங்கிக் கொள்வதற்கு ஒரு கூடு தேடிக் கொண்டிருக்கிறோம், பசி தரும் வலியுடன். எங்களை இந்த துயரத்திலிருந்து மீட்க வாருங்கள். தத்தளித்துக் கொண்டிருக்கும் எங்கள் தலைமுறை கரைசேர உதவுங்கள். முடியாவிட்டால் சில ஆறுதல் வார்த்தைகளையாவது சொல்லுங்கள். இனியும் இழப்பதற்கு எங்களிடம் குருதியில்லை.

இங்கு பசியில் அழும் குழந்தைக்கு ஒரு நேர பால் வாங்கி தரவிரும்பாத நீங்கள்- பட்டினியில் மயங்கும் முதியோருக்கு ஒரு நேர கஞ்சி ஊற்ற விரும்பாத நிங்கள் தேசியம்! சுயநிர்ணயம்! சுயாட்சி! என்றெல்லாம் கூறி எங்களை உங்கள் நலனுக்கான பகடைக் காய்களாக்க முயற்சிக்காதீர்கள்.

வீழந்து கிடக்கும் எமக்கு உதவ விரும்பாத நீங்கள், உதவ முன்வருபவர்களையும் மிரட்டி துரோகி பட்டம் சூட்டி அடாவடித்தனம் செய்யும் நீங்கள் எங்களது அரசியல் உரிமையில் மட்டும் அக்கறை காட்டுவதனை எப்படி நம்புவது?

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதாகச் சொல்வதை எந்த அடிப்படையில் நம்புவது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக