17 செப்டம்பர், 2010

சவூதி மலாஸ் சிறைச்சாலையில் இலங்கையர் பலர் தடுத்துவைப்புசவூதி அரேபியாவில் றியாத்திலுள்ள மலாஸ் சிறைச்சாலையில் நூற்றுக் கணக்கான இலங்கையர்கள் சிறு சிறு குற்றச்சாட்டுக்களின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களின் விடுதலை தொடர்பிலோ அன்றேல் சேமநலன் குறித்தோ சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை எனவும் இதனால் அவர்கள் மிகுந்த விரக்திக்கு ஆளாகியுள்ளதாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் றியாத்திலுள்ள மலாஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் கேசரிக்கு நேற்று வழங்கிய தகவலில், இங்கு நூற்றுக் கணக்கான இலங்கைப் பிரஜைகள் சிறு சிறு குற்றச்சாட்டுக்களின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் அநேகமானோர் மிகவும் அப்பாவிகள். தங்கள் சம்பளம் குறித்து வீட்டு எஜமானர்களிடம் கேள்வி எழுப்பினாலேயே உடன் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறைச்சாலைக்குள் தள்ளிவிடுகின்றனர். எம்மை இங்குள்ள வேலை வழங்குனர்கள் அடிமைகளைப் போன்றே நடத்துகின்றனர். இரவு பகலாக வேலை வாங்குவதுடன் ஏதேனும் சிறு தவறு இழைத்தால்கூட அடித்து சித்திரவதை செய்வதுடன் பொய்க் குற்றச்சாட்டுக்களின்பேரில் எம்மீது அவர்களின் நாட்டு சட்டப்படி வழக்குத் தொடர்கின்றனர்.

அநேகமாக எம்மில் பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்களேயாவர். எமக்கு வாக்குறுதி அளித்தபடி ஊதியம் வழங்கப்படுவதில்லை. அது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. அத்துடன் மொழிப் பிரச்சினை காரணமாக நாம் கூறுவது அவர்களுக்குப் புரியாது. இதனால் நாம் பெரும் துன்பங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

பெரும்பாலும் பெண்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர். இவற்றைத் தட்டிக் கேட்கவும் எவரும் இல்லை. நாம் எப்படியாவது வேலை செய்து பிழைக்கவே இங்கு வந்தோம். ஆனால் எமது நிலை “அடுப்புக்குள் இருந்து நெருப்புக்குள்’ விழந்ததைப் போன்றுள்ளது.

நாம் இங்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கூட எமது உறவினர்களுக்குத் தெரியாது. சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் எமக்கு உதவும் என்ற நம்பிக்கையிலேயே இன்னும் இருந்து வருகிறோம்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள வேறு நாட்டுப் பிரஜைகளை அவர்களின் நாட்டு தூதரக அதிகாரிகள் வந்து பார்வையிடுவதுடன் அவர்களின் விடுதலைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் எமது தூதரக அதிகாரிகள் எம்மை வந்து பார்த்து எமக்கு ஆறுதல் கூறாதது எம்மை வேதனையடையச் செய்கிறது. அது மாத்திரமன்றி பல பெண்கள் எஜமானர்களின் கொடுமை தாங்காது வீட்டிலிருந்தும் ஓடிவந்து றியாத்தில் பாலங்களின் அடியில் அடைக்கலம் பெற்று வாழ்கிறார்கள். இவர்கள் திரும்பிச் செல்ல பணமில்லாத காரணத்தினாலேயே இவ்வாறு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். எனவே சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் எமது விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மன்றாடிக் கேட்கின்றோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக