17 செப்டம்பர், 2010

"தமிழ் இளைஞர்களை நீதித்துறை கைவிட்டுவிட்டது"
இலங்கையில் விசாரணை இன்றி பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை நீதித்துறை கைவிட்டு விட்டதாக இலங்கையின் மூத்த இராஜதந்திரியான நந்தா கொடகே படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன்பாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


இலங்கையில் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல், பல்லாயிரக் கணக்கான சிறுபான்மைத் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக, இலங்கையின் ஓய்வு பெற்ற மூத்த இராஜதந்திரியான நந்தா கொடகே தெரிவித்திருக்கிறார்.

இவர்களில் பலர், பல ஆண்டுகளாக இவ்வாறு அகப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைப் போரின் இறுதி நாட்கள் குறித்து ஆராயும், படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான இலங்கை ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

இத்தகைய போர் ஒன்று இலங்கையில் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிவகைகளையும் இந்த ஆணைக்குழு ஆராய்கிறது.

விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறைந்தது இரண்டாயிரம் தமிழ் இளைஞர்களாவது இவ்வாறு பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் முன்னாள் தூதரான நந்தா கொடகே அந்த ஆணைக்குழுவின் முன்பாக கூறினார்.

இவர்களைவிட பல்லாயிரக்கணக்கானவர்கள், கடந்த ஆண்டு போர் முடிந்தது முதல் முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நீதித்துறை அவர்களை கைவிட்டு விட்டது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

இவர்களை இந்த மாதிரி தொடர்ந்து தடுத்து வைத்திருந்தால், பல பிரபாகரன்கள் தோன்றுவதற்கு அது வழி செய்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் மாத்திரம், சுமார் 500 இளைஞர்கள் கொழும்பு வெலிக்கட சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து தான் மிகுந்த ''ஆத்திரம்'' கொண்டுள்ளதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று அவர் ஒப்புக்கொள்கிற போதிலும், அந்த இளைஞர்களுக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லாதபட்சத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் நந்தா கொடகே கூறினார்.

தான் பிரிட்டனில் இருக்கும் போது விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்ததாக பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய ஒரு தமிழ் பொறியியலாளர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் இருக்கும் பலர் இவ்வாறு விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுவது குறித்து அவர் பல தடவைகள் வலியுறுத்தியும், ஒரு வருடத்துக்கும் மேலாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக நந்தா கொடகே கூறினார்.

சில உயர் அதிகாரிகள் இந்த கைதிகள் குறித்து அனுதாபத்துடன் இருக்கின்ற போதிலும், சிக்கலான அதிகாரவர்க்கக் கட்டமைப்பு காரணமாக அந்தக் கைதிகள் மறக்கப்பட்டு விடுகிறார்கள் என்றும் அந்த ஓய்வுபெற்ற இராஜதந்திரி கூறினார்.

முன்னாள் விடுதலைப்புலி அமைப்பு உறுப்பினர்கள் அல்லது சந்தேக நபர்கள் எல்லாரும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதில்லை.

மிகவும் மூத்த உறுப்பினரான கேபி என்று அழைக்கப்படுபவர், பெயரளவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்கிறார்.

மற்றுமொரு மூத்த உறுப்பினரான தயா மாஸ்டர்- தற்போது நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஒரு தொலைக்காட்சி நிலையத்தை நடத்துவதற்கு தான் உதவிக்கொண்டிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

bbc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக