17 செப்டம்பர், 2010

பிரித்தானிய பாராளுமன்ற விவாதத்தை இலங்கை அரசாங்கம் எதிர்க்கவில்லை -அமைச்சர் கெஹெலிய




இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமானதும் பூரணமானதுமான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமானால் அது இலங்கையின் தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு சாதகமானதாக அமையும் என பிரித்தானிய பாராளுமன்றம் தெரிவித்துள்ள நிலையில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தை இலங்கை அரசாங்கம் எதிர்க்கவில்லை என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கடந்த மாநாட்டில் ஜனாதிபதி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் உரையாற்றினார். இம்முறை ஜனாதிபதி விஜயம் செய்திருப்பது மிக முக்கியமான சந்தர்ப்பமாகும் என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

இலங்கை தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பேசியிருப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி கொள்ளவில்லை. எதிர்க்கவும் இல்லை. ஜனநாயக ரீதியில் பேசப்படுகின்றது எனினும் நாட்டின் இறைமை ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஏதாவது பேசப்படுமாயின் அவைதொடர்பில் நடவடிக்கைளை எடுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை.

பாராளுமன்ற பேரவைக்கான பெயர்கள் கிடைத்தால் ஏழு ஆணைக்குழுக்களும் ஜனவரிக்கு முன்னதாக நியமிக்கப்படும். 17 ஆவது திருத்தத்தின் ஊடாக ஆணைக்குழுக்களுக்கான பெயர்களை சிபாரிசு செய்வதில் பெரும் சிக்கல் நிலைமை ஏற்பட்டிருந்தது. 18 ஆவது திருத்தத்தின் ஊடாக அந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

17 ஆவது திருத்தம் போல பெயர்களை சிபாரிசு செய்யாமல் இருக்கமுடியாது. ஒரு வாரத்திற்குள் பெயர்களை சிபாரிசு செய்யவேண்டும். இன்றேல் சபாநாயகர் பெயரை சிபாரிசு செய்யலாம். அந்த வகையிலேயே 18 ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அத்துடன் கொழும்பு மாநகர சபையை விசேட அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்படவில்லை. அவைதொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது. ஐந்து நட்சத்திர ஜனநாயக நாட்டில் முன்னெடுக்கப்படும் நகர அபிவிருத்தி முறையொன்றே முன்னெடுக்கப்படவிருக்கின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக