17 செப்டம்பர், 2010

ஐ.தே.க. ஆட்சிக்கால திருத்தங்களைவிட அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் ஜனநாயக அம்சம் கொண்டது


அரசாங்கத்தின் 18வது அரசியலமைப்புத் திருத்தம் முன் னைய ஐ.தே.கவின் திருத்தங்களை விடவும் பன்மடங்கு ஜனநாயக அம்சம் கொண்டதென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கருவுக்கு அமைச்சர் சுசில் பதில

61 இலட்சம் மக்களின் வாக்கு ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு ஆதரவாகக் கிடைத்தவையே எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர்; 18வது அரசியலமைப்புத் திருத்தம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலம் போன்று அவசர மாகப் பாராளு மன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டதொன்றல்ல எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய அரசாங்கத்துக்கு எதிராக வெளியிட்டு வரும் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக “அரசாங்கத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிராக அணிதிரள் வதற்கு காலத்தை அர்ப்பணிப்பேன்” என அவர் வெளியிட்டுள்ள அறிக்கைக்குப் பதிலளித்துள்ள அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது இருப்பது கரு ஜயசூரியவின் ஐ.தே.க வினால் 1978ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கு உட்பட்ட நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கமுமாகும்.

அத்துடன் 13வது திருத்தத்தினூடாக ஐ.தே.க அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பது மாகாண சபைகளில் எட்டு மாகாண சபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நிர்வாகத்திலும் ஐ.தே.க வால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேச சபை சட்ட மூலத்திற்கிணங்கிய பெருமளவு பிரதேச சபைகளும் அரசாங்கத்தின் நிர்வாகத்திலேயே உள்ளன. இதற்கான பெரும்பான்மை அதிகாரங்கள் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வையாகும்.

1977ம் ஆண்டு ஆறு வருடங்களுக்காக நியமிக்கப்பட்ட எம்.பிக்கள் மற்றும் நிர்வாக முறையை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மேலும் ஆறு வருடங்களுக்கு ஐ.தே.க. நீடித்தபோது ஜே.ஆரின் சர்வாதிகாரம் பற்றியோ ஐ.தே.க.வின் சர்வாதிகாரம் பற்றியோ கரு ஜயசூரிய எம்.பி. குரலெழுப்பவில்லை.

யுத்தம் எனும் சாபத்திலிருந்து நாட்டை மீட்பதற்காகவே தாம் அரசாங்கத்துடன் இணைந்ததாக கூறிய கரு ஜயசூரிய; அவருடன் அரசாங்கத்தில் இணைந்த ஏனையோர் இறுதி யுத்தம் வரை அரசுடன் இருந்தபோதும் இடை நடுவில் எதிர்க்கட்சிக்கு மீண்டும் சென்றமை எந்தவிதத்தில் நியாயமாகும்?

அரசாங்கம் கொண்டு வந்துள்ள 18 வது அரசியலமைப்புத் திருத்தம் ஐ.தே.க அதன் ஆட்சிக்காலத்தில் மேற் கொண்ட திருத்தத்தை விட ஜன நாயக ரீதியானது.

18வது திருத்தம் சர்வாதிகாரமானதல்ல. அவ்வாறு இருந்திருக்குமானால் கரு ஜயசூரிய பத்திரிகைக்கு அறிக்கை விடுவதை விட்டுவிட்டு கடந்த 8ம் திகதி பாராளுமன்றத்துக்கு வந்து ஹன்சாட்டில் பதியும்படி தர்க்க ரீதியான விடயங்களை முன்வைத்திருக்கலாமே அதனை ஏன் அவர் செய்யவில்லை? அவரது பத்திரிகைக் கூற்றின் தர்க்கப்படி, 2010 ஜனாதிபதி தேர்தலின் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பது பற்றி கூறப்படவில்லை என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.

கரு ஜயசூரிய ஆதரவு வழங்கிய சரத் பொன்சேகா நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக மக்களுக்குக் கூறிய போதும் அவருக்கு 40 இலட்சம் வாக்கே கிடைத்தது. இதன் மூலம் அக்கருத்தை மக்கள் நிராகரித்துவிட்டமை தெளிவாகிறது.

13வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக படையினரின் பாதுகாப்புடன் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை அழைத்துவந்ததை அவர் மறந்துவிட்டாரா? அப்போது ஐ.தே.க. எம்.பிக்கள் வழங்கிய இராஜினாமாக் கடிதங்கள் ஜே. ஆரிடம் பத்திரமாக இருந்ததையும் கரு ஜயசூரிய ஞாபகப்படுத்திப் பார்க்கட்டும்.

2002 பெப்ரவரியில் ரணில் விக்கிரமசிங்க பிரபாகரனுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் போது கரு ஜயசூரிய எவ்வித அதிர்ச்சியுமடையாதது புதுமைதான்.

2003ல் மின் சக்தித்துறை அமைச்சராக அவர் இருந்தபோது இந்திய ஒயில் கம்பனிக்கு திருகோணமலை எண்ணெய்க்குதத்தை குத்தகைக்கு வழங்கவும் பெற்றோலியக் கூட்டுத்தாப னத்தை மூன்றாகப் பிரித்து அதில் மூன்றில் ஒரு பகுதியை விற்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் கூட்டுத்தாபனத்தி ற்குப் பெற்றுக்கொடுத்தார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் எதிர்காலத்தில் ஜனநாயக அடிப்படையில் நாட்டை ஆட்சி செய்வதுடன் இலங்கையை ஆசியாவின் உன்னத நாடாக உயர்த்தும் எனவும் அமைச்சர் தமது பதிலில் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக