16 ஜூலை, 2010

அதியுயர் பாதுகாப்பு வலயமும் முகாம்களும் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமானவை-அரசாங்கம்

அபிவிருத்தி,பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விடயங்களில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு, மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாது.

நாட்டின் பாதுகாப்புக்கு அதியுயர் பாதுகாப்பு வலயங்களும் படை முகாம்களும் முக்கியமானதாகும் என்று அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

மக்கள் மீளக்குடியர்த்தப்படுகின்றனர் அவர்களுக்கென ஒரு துண்டு காணி வழங்கப்படுகின்றது. அவர்கள் ஆகாயத்தில் குடியேற்றப்படவில்லை காணி உறுதியிருந்தாலும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள காணிகளை அவர்களுக்கு வழங்கமுடியாது என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக வியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் மீளக்குடியமர்த்தும் போது வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் போதுமானது இல்லை என்பதை நான் அறிவேன். மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களை முதன் முதலாக சந்திக்கின்றவர்களுக்கு அதே உணர்வு ஏற்படும். ஆனால் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது அகதிகளுக்கு கூடுதலாகவே நாம் செய்துள்ளோம்.

அமெரிக்காவின் இராணுவ முகாம் கொரியாவில் இருக்கின்றது அதேபோல நாட்டின் பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்களும் அதியுயர்பாதுகாப்பு வலயங்களும் முக்கியமானதாகும். அவை நிச்சயமாக இருக்கவேண்டியவையாகும். அதற்கான நிலங்களை உற்பத்தி செய்யமுடியாது. பாதுகாப்பை கவனத்தில் கொண்டே முகாம்கள் அமைக்கப்படும். நினைத்த இடங்களில் எல்லாம் முகாம்களை அமைத்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அமைக்கமுடியாது. வீதிகளை நிர்மாணிக்கப்படுகின்ற போது சில வீதிகள் வீடுகளுக்கு இடையில் செல்லும் அவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டு காணியும் வழங்கப்படுகின்றது.

மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியர்த்தப்படவில்லை என்றும் அவர்கள் மீளவும் அகதிகளாக்கப்பட்டுள்ளதாகவும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவதற்காக தமது காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர் அவைத்தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ? என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இடம்பெயர்ந்தோர் மீளக்குடியமர்த்தப்பட்ட காணியை காணி உரிமையாளர்கள் கோரும் சம்பவங்கள் 10 வீதமே இருக்கின்றன. அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்படுவதுடன் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் தமது காணி இருப்பதற்கான உறுதி பத்திரங்களை வைத்திருந்தாலும் அவர்களுக்கு அக்காணி மீளவும் வழங்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் சொன்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக