16 ஜூலை, 2010

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவதை நிறுத்த உறுதியான நடவடிக்கை: ஸ்டாலின்



இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்களைத் தாக்குவதை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து முதல்வர் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். மேலும் அவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவதை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். மின் தடை என்பது நாடு முழுவதும் இருந்து வருகிறது. தமிழக அரசு சார்பில் மின் தடையைப் போக்க முடிந்த அளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் ஜூலை 19 ஆம் தேதி முதல்வரும் இது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் மின் தடை மிகவும் குறைவாகவே உள்ளது. நெய்வேலியில் அமைக்கப்பட்டுவரும் புதிய அனல் மின் நிலையம் உற்பத்தியை தொடங்கி விட்டால் தமிழகத்தில் மின் தேவை பூர்த்தியாகிவிடும்.

அதிமுக தற்போது வேகமாக சரிந்து வருகிறது. அதைத் தூக்கி நிறுத்த ஜெயலலிதா தீவிரம் காட்டி வருகிறார். இதன் தாக்கம்தான் கோவையில் நடைபெற்ற அதிமுகவினரின் ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஜெயலலிதாவும் கூட்டணி குறித்து பேசியிருக்கிறார். தற்போது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகி திமுகவில் இணைந்து கொண்டிருக்கின்றனர். கீழக்கரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் கீழக்கரையில் புதிய தாலுகா செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக