16 ஜூலை, 2010

வடக்கில் 640 கிராமங்களில் 105 மில். கண்ணிவெடிகள் அகற்றும் பணியை துரிதமாக்க தேசிய செயற்பாட்டு நிலையம்






வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைத் துரிதமாக்குவதற்காக தேசிய செயற்பாட்டு நிலையமொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பிரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வடக்கில் 640 கிராமங்களில் 105 மில்லியன் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் சுமார் 2,60,000 கண்ணிவெடிகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதன்படி 20% மாத்திரமே கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது. இதற்கென 860 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங்கம் செலவிட்டுள்ளது.

90% இராணுவத்தினரே கண்ணி வெடிகளை அகற்றியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை உயர் பாதுகாப்பு வலயங்கள் தவிர்க்க முடியாதவை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ‘இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்துவதாகக் கூறி அழைத்துச் சென்று அவர்களை மீண்டுமொரு முகாமில் தங்க வைத்திருப்பதாகவும், அவர்களின் சொந்த வாழ்விடத்திற்குச் செல்லவிடாமல், உயர் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது உண்மையா?’ என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல’, 30 வருட காலமாக வாழ்வதற்கான உரிமையே இருக்கவில்லை, எனவே அங்கு மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. பாதுகாப்புக்கு உயர் பாதுகாப்பு வலயங்கள் தவிர்க்க முடியாதவை. சொந்தக் காணி என்று உரிமை கோருபவர்கள் அதற்கான எந்தச் சான்றும் இல்லாமல் இருக்கின்றனர். அதனால்தான் மீள்குடியேறுவதில் சிக்கல் இருக்கிறது’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக