16 ஜூலை, 2010

விஜயின் வேலாயுதம் - 20 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் படபூஜை!

இயக்குனர் ஜெயம் ராஜா இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் பூஜை சென்னையில் 20 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்தது.

ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடிக்கிறார்கள். விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார்.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் 30 மாவட்டங்களிலிருந்து விஜய் ரசிகர்கள் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். முன்னதாக ரசிகர்கள் மெரினாவில் இருந்து ஜோதி ஏந்தி ஊர்வலமாக வந்து விஜய்யிடம் ஜோதியை கொடுத்தனர்.

விஜய்யின் அப்பா இயக்குனர் சந்திரசேகரன் - ஷோபா சந்திரசேகரன், எடிட்டர் மோகன் - அவரது மனைவி, ஜெயம் ராஜா - அவரது மனைவி, தயாரிப்பாளர் ஸ்ரீதர் - அவரது மனைவி ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவினை வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய விஜய், படத் தொடக்கவிழாவை எளிமையாக நடத்தும்படி தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கேட்டுக்கொண்டேன். அவர் எதனையும் பிரம்மாண்டமாகச் செய்பவர். தசாவதாரம் பட பாடல் வெளியீட்டுக்கு செய்த மிகப் பெரிய பிரமாண்ட விழாவெல்லாம் எனக்கு வேண்டாமென அவரைக் கேட்டுக்கொண்டேன்.

நான் அவ்வளவு பெரிய நடிகனும் அல்ல. எனக்கு ரசிகர்கள் தான் முக்கியம். எனவே இந்த விழாவுக்கு அவர்களையே பிரதம விருந்தினர்களாக அழைத்துள்ளோம். எல்லோருக்கும் ஆஸ்கார் விருது ஆசை இருக்கும். ஆஸ்கார் பிலிம்ஸ் படத்தில் நடிக்கும் ஆசையும் இருக்கும். வேலாயுதம் படத்தின் மூலம் எனக்கு ஆஸ்கார் நிறுவனத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஜெயம் ராஜா ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் அவரது தம்பி ஜெயம் ரவியை வைத்துதான் படம் இயக்குவார். முதல் முறையா வேற ஒரு நாயகனை வச்சு படம் பண்ணுறார். என்னையும் உங்க தம்பியா நினைச்சுக்கோங்கன்னு அவரிடம் சொல்லியிருக்கிறேன். என்ன...

நான் அவர் அளவுக்கு கலர் இல்லை. சச்சின் படத்துக்கு பிறகு ஜெனிலியா இந்த படத்தில் என்னுடன் நடிக்கிறார். தமிழ்ல நடிச்சாங்க, தெலுங்கு சினிமா பக்கம் போனாங்க, ஹிந்திக்கும் போனாங்க, அப்பிடியே போய் விடலாமென நினைச்சவங்களை பிடித்து தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறோம். என விஜய் சொன்ன போது சபையில் கரவொலி கிளம்பியது.

(ஐஃபா விழாவுக்கு இலங்கை வர நினைச்ச விடயம் தான்) இன்னொரு நாயகி ஹன்சிகா மோத்வானியும் ஏராளமான தெலுங்கு சினிமாக்களில் நடித்திருக்கிறார். தமிழிலும் தனுஸ், ஜெயம் ரவியுடன் நடிக்கிறார். அவர் தமிழ் சினிமாவின் ஆரம்ப கால குஷ்பு இருந்தது போல இருக்கிறார், என சான்றிதழும் கொடுத்தார்.

படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசுகையில், 2011ம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் ஆக இந்த படம் இருக்கும். பொதுவாக படத்தை பார்க்கும்போதுதான் சீட் நுனியில் இருப்போம். இந்த படத்தின் கதையை கேட்கும்போதே நான் நுனி சீட்டில்தான் இருந்தேன். அவ்வளவு விறுவிறுப்பான கதை, என்றார். விஜயுடன் இவர் இணையும் இரண்டாவது சந்தர்ப்பம் இது. (முன்னர் வேட்டைக்காரன்)

விழாவில் வேலாயுதம் படத்தின் ஆரம்பக்கட்ட புகைப்படங்களைத்தொகுத்து டிரெய்லர் ஒன்று வெளியிடப்பட்டது. அதேபோல் இந்த படத்தின் திரைக்கதை புத்தகத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வழங்க, இயக்குநர் ஜெயம் ராஜா பெற்றுக்கொண்டார். இன்னொரு நிகழ்வாக விஜய்யின் செயலாளரும் சினிமா பத்திரிகை தொடர்பாளருமான பி.டி. செல்வகுமார் விஜய் பற்றி எழுதிய 'விஜய்யின்' சாதனை நாயகனின் சரித்திரப் படைப்பு' என்ற புத்தகத்தை விஜய் வெளியிட்டார்.

விஜயுடன் முதன் முதலில் கைகோர்க்கும் படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா படம் பற்றி தெரிவித்த சில சுவாரசியமான விடயங்கள், இது ஒரு மாஸ் ஹீரோவுக்கான படம். சாதாரண மனிதனைச் சுற்றி நடக்கும் சில சம்பவங்களினால், அவன் மக்களின் நாயகனாக எவ்வாறு உருவெடுக்கின்றான் என்பதே படத்தோட கதைச்சுருக்கம்.

இதில் விஜய் ஒரு துடிப்புள்ள இளைஞனாகவும், ஜெனிலியா ஊடகவியலாளராகவும் நடிக்கிறார்கள். ஹன்ஸிகா மற்றும், சரண்யா மோகன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தில் நகைச்சுவைப் பகுதிக்காக சந்தானம் மற்றும் சத்தியன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் விஜயின் மார்க்கெட்டை உயர்த்துவதற்காக சித்திக் ஒரு பக்கம் முயன்று கொண்டிருக்கும் போது, காவல் காதல் வெளியாக முன்னரே வேலாயுதம் படத்தின் பூஜையும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக