16 ஜூலை, 2010

குழந்தைகளை அடித்தால் பெற்றோருக்கு 1 ஆண்டு ஜெயில்; புதிய சட்டம் வருகிறது






சிறுவர், சிறுமிகளில் பலர் பள்ளிகளில் மட்டுமின்றி வீடுகளிலும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பத்துக்குள்ளாகிறார்கள். அப்படி பாதிக்கப்படும் சிறுவர், சிறுமிகளை காப்பாற்ற பல்வேறு அமைப்புகள் இயங்குகின்றன. தேசிய அளவில் ஹெல்ப் லைனும் உள்ளது. என்றாலும் குழந்தைகளை அடித்து துன்புறுத்துவது நீடிக்கிறது.

சில இடங்களில் குழந்தைகளை பெற்றோர் மட்டுமின்றி மாற்றாந்தாய், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்களும் அடித்து துன்புறுத்தும் நிலை உள்ளது. இதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரும் முயற்சிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. குழந்தைகள் சட்டம் 2009 என்ற பெயரில் அந்த சட்டத்துக்கான வரை முறைகள் உருவாக்கப்பட்டு விட்டன.

இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி கிருஷ்ணதிரத் கூறுகையில், சிலர் தங்கள் குழந்தைகளை அளவுக்கு மீறி அடித்து துன்புறுத்துகிறார்கள். அவர்களை தண்டிக்க இந்த சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் பெறப்படும் என்றார்.

குழந்தைகளை துன்புறுத்து வதாக முதன் முதலாக கைது செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அதே பெற்றோர் குழந்தைகளை அடித்ததாக பிடிபட்டால், அவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

அமெரிக்காவில் குழந்தைகள் பாதுகாப்புக்கு என்று வலுவான சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின்படி தன்னை துன்புறுத்தும் பெற்றோருக்கு எதிராக, சிறுவர், சிறுமியர் கோர்ட்டில் வழக்குத் தொடர முடியும்.

அதே பாணியில் இந்தியாவிலும் வர இருக்கும் சட்டத்தில் உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் அளவுக்கு அதிகமாக அடிக்கும் பெற்றோர் மீது இந்திய குழந்தைகளும் வழக்குத் தொடர முடியும்.

பெற்றோர் மீது மட்டு மின்றி உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மீதும் ஒரு குழந்தையால் வழக்குத் தொடர இந்த சட்டத்தில் வாய்ப்பு உள்ளது. குழந்தை தொழிலாளர் முறையை ஒடுக்க இந்த சட்டம் பயன் படுத்தப்படும்.

ராக்கிங் குற்ற நிகழ்வுகளுக்கு தண்டனை கொடுக்கும் அம்சமும் இந்த சட்டத்தில் வர உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக