16 ஜூலை, 2010

நாட்டில் ஒரே அரசாங்கமே இயங்குகிறது என்ற சிந்தனையில் செயற்பட வேண்டும்

கிளிநொச்சி அரச ஊழியர்கள் மத்தியில் ஜனாதிபதி

வட பகுதியில் சேவை செய்ய வடக்கு மருத்துவர்கள் முன்வருவதில்லை. யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள் தமது மக்களுக்கு சேவை செய்யாமல் வெளிநாடுகளில் உள்ளனர். மக்கள் இவர்களை அழைக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அரச ஊழியர்கள் மத்தியில் பேசும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

வடபகுதி அரச ஊழியர்கள் அனைவரும், இப்போது ஒரே அரசாங்கமே இயங்குகிறது என்ற சிந்தனையிலேயே செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-

‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதை உணர்ந்து வடக்கு மக்களின் 30 வருட கண்ணீருக்கு விடைகொடுக்க அரச உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியம்.

அரசாங்கம் கடனுதவிகளைப் பெற்றே வடக்கின் அபிவிருத்தியை மேற் கொள்கின்றது. இதனை நன்குணர்ந்தவர்களாக அரச உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும். கண்ணீருடன் வாழ்ந்த மக்க ளின் வாழ்வில் சுபீட்சம் மலர அர்ப்ப ணிப்புடன் உழைக்க வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் உங்களுடையதே. கடந்த காலங்களில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு நீங்கள் அவர்களுக்கேற்ப செயற்பட வேண்டியிருந்தது. அதனை நாம் அறிவோம்.

கடந்த தேர்தலிலும் அதன் வெளிப்பாடு பிரதிபலித்தது.

இப்போது அவ்வாறில்லை. ஒரே அரசாங்கமே உள்ளது. அதற்குக் கட்டுப்பட்டு பொறுப்புடன் செயற்படாவிட்டால் இங்குள்ள அரச உத்தியோகத்தர்களை அம்பாந்தோட்டைக்கு மாற்ற நேரிடும்.

துன்ப துயரங்களுக்குள்ளான மக்களுக்குச் சேவை வழங்கும் போது அன்பையும் அரவணைப்பையும் சேர்த்து வழங்குவதுடன் அவர்களின் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வை வழங்குவது அவசியம்.

உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முற்பட்டு புதிய பிரச்சினைகளை உருவாக்காமல் கவனமாக செயற்பட வேண்டும்.

இரணைமடுக் குளம் பகுதி புலிகளின் கோட்டையாக விளங்கிய பகுதியாகும். நாட்டைப் பிளவுபடுத்தும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட இடம். புலிகளின் முக்கியஸ்தர் அன்டன் பாலசிங்கம் ‘சீ பிளேனில்’ வந்து காரியமாற்றிய இடம். அத்தகையதொரு இடம் மீட்கப்பட்டு இந்தளவு விரைவாக இங்கு அமைச் சரவைக் கூட்டத்தையே எம்மால் நடத்த முடிந்துள்ளது.

இரணைமடுக் குளம் இலங்கையிலுள்ள முக்கிய நான்கு நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்று. இங்கிருந்து வடபகுதி எங்கும் நீர் வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம். நாம் ‘சீ பிளேன்’ சேவை நடத்துவோம். அது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காகவே எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக