6 ஜூலை, 2010

வெளிநாட்டுத் தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சி: கோத்தபய ராஜபட்ச






விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவு தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் மூலம் வெளிநாடுவாழ் தமிழர்களின் ஆதரவைப் பெற முயற்சித்து வருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

புலிகளின் ஆயுதபேர வர்த்தகத்தை கவனித்து வந்த குமரன் பத்மநாதன், இறுதிகட்ட போரின்போது அந்த அமைப்பின் சர்வதேசப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், கோலாலம்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்படும் அவர், அப்ரூவராக மாறி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அவர் மூலம் வெளிநாடுவாழ் தமிழர்களின் ஆதரவைப் பெறவும், புலிகளின் வெளிநாட்டு அமைப்புகளை அழிக்கவும் முயற்சித்து வருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளார்.

"சர்வதேச அளவில் மூன்று அமைப்புகள், விடுதலைப் புலிகள் ஆதரவுப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. சர்வதேச தமிழ் கூட்டமைப்பும், ருத்ரகுமார், நெடியவன் ஆகிய இரண்டு தனிநபர்களும் புலிகளின் பிரதிநிதிகளாக இன்னமும் செயல்பட்டு வருகின்றனர். புலிகள் விவகாரத்தில் உலகிற்கு உண்மையை எடுத்துரைக்க இலங்கை அரசு கடைமைப்பட்டிருக்கிறது' என்று அவர் மேலும் கூறினார்.

பத்மநாதனின் அழைப்பின்பேரில், வெளிநாடுவாழ் தமிழர் தலைவர்கள் அண்மையில் கொழும்பு வந்துள்ளனர்.

அவர்களிடம் பேசிய பத்மநாதன், போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், அங்கு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இதுபோல், பத்மநாதனின் தொடர்புகள் மூலம் வெளிநாடுவாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து அவர்களின் ஆதரவைப் பெற இலங்கை அரசு முயற்சித்து வருவதாக "சண்டே அப்சர்வர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக