19 அக்டோபர், 2010

இலங்கை கைப்பணிப்பொருட்கள் புதுடில்லி கண்காட்சியில்

புதுடில்லி நகரத்தில் இம்மாதம் 29ம் திகதி முதல் நவம்பர் 11ம் திகதி வரை ‘சில்ப சிஹலங்கா கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை’ நடைபெறவுள்ளன.

இந்தியாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், இந்திய கைப்பணிப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம் மற்றும் இலங்கை உல்லாசத் துறை மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் தேசிய அருங்கலைகள் பேரவை இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனை சந்தையை ஏற்பாடு செய்துள்ளது.

புதுடில்லி (டில்லி ஹாட்) கைப்பணிப் பொருட்கள் விற்பனை மத்திய நிலையத்தில் நடைபெறுகின்ற இக்கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தையில் இலங்கையின் பல்வேறு துறைசார்ந்த கைப்பணிப் பொருள் உற்பத்தி கலைஞர்கள் 11 பேர் கலந்து கொள்கின்றனர்.

கலைஞர்களை வழியனுப்பி வைக்கும் முகமாக நேற்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கொழும்பு அமைச்சு அலுவலகத்தில் விசேட வைபவம் ஒன்று நடைபெற்றது. இதன் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில்:

பாரம்பரிய கலாசார விழுமியங்களை பிரதி பலிக்கும் கைப்பணிப் பொருட்களின் ஊடாக இரு நாடுகளினதும் உறவுப் பாலத்தை நாம் வளமுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் இச்சந்தர்ப்பத்தை மிகவும் சரியாகப் பயன்படுத்தி கலைஞர்கள் மேம்பாடு அடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் தேசிய அருங்கலைகள் பேரவையும் தேசிய வடிவமைப்புச் சபையும் இணக்கப்பாடுகளுடன் தத்தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வழிவகைகள் தன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மக்களுக்கு காலத்திற்குத் தேவையான சிறந்த வடிவமைப்புக்களையும் கைப்பணிப் பொருட்களையும் உருவாக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் இவ்வாறான நிகழ்வுக்கான ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ள தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் புத்தி கீர்த்திசேனவுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

ஜனாதிபதி பாரம்பரிய கைப்பணிப் பொருட்கள் தொடர்பில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் இருப்பதால் இத்துதீறாசர்ந்த பல்வேறு துறைகளை பல வழிகளிலும் அவரிடமிருந்து பெற்று இத்துறையை சிறந்து மேம்படுத்த இயலும் என்றும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக