19 அக்டோபர், 2010

இந்திய வெளியுறவு அமைச்சர்கிருஷ்ணாவின் விஜயம் ஒத்திவைப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இலங்கைக்கு இம்மாத இறுதிப் பகுதியில் மேற்கொள்ளவிருந்த உத்தியோகபூர்வ விஜயம் அடுத்தமாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா அடுத்தமாதம் 25 முதல் 28 ஆம் திகதிகளுக்கு இடையில் இலங்கைக்கு விஜயம் செய்யலாம் என்று வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவித்தன.

. இம்மாதம் 28, 29 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். எனினும், தற்போது இந்த ஏற்பாடுகளில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரிட்டன் சென்றுள்ளார். பிரிட்டன் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹோக்கின் அழைப்பையேற்றே பீரிஸ் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஜீ.எல்.பீரிஸ் பிரிட்டனின் பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹோக் உள்ளிட்ட பலரரையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும் பிரிட்டனுக்கான விஜயத்தின்போது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மாவையும் ஜீ.எல். பீரிஸ் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக