19 அக்டோபர், 2010

உள்ளூராட்சி மன்றங்கள் சட்ட மூலம்; மேல் மாகாண சபையில் எதிர்ப்பின்றி இணக்கம்


உள்ளூராட்சி நிறுவனங்கள் சட்ட மூலம் மற்றும் உள்ளூராட்சி தாபனங்கள் தேர்தல் சட்ட மூலங்களுக்கு மேல் மாகாண சபையின் இணக்கம் வழங்கப்பட்டது.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்திலெடுத்து சட்ட மூலங்களுக்கு மாகாண சபையின் இணக்கம் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபையின் பிரதித் தலைவர் ரன்ஜித் சோமவன்ச விவாதத்தின் முடிவில் தெரிவித்தார்.

மேற்படி சட்ட மூலங்கள் தொடர்பான விவாதம் மேல் மாகாண சபையின் ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் பிரதித் தலைவர் ரன்ஜித் சோமவன்ச தலைமையில் நேற்று (18) திங்கட்கிழமை நடைபெற்றது.

மேல் மாகாண சபையின் கூட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் சபை நிகழ்வுகளின் பின்னர் சபை ஒழுங்குவிதிகளின்படி மேற்படி சட்ட மூலம் திருத்தம் தொடர்பான அறிவித்தலை சபை விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் சபையில் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து மேல் மாகாண முதலமைச்சரும் உள்ளூராட்சி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக சபையில் அறிவித்தார். மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி சார்பில் விவசாய அமைச்சர் சட்டத்தரணி உதய கம்மன்பில விவாதத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார். ஆளும் தரப்பு சார்பில் குறிப்பிட்ட சட்ட மூலம் தொடர்பான கருத்துக்களையும் மேற்கெள்ளப்பட வேண்டிய ஆலோசனைகளையும் சட்டவரைபு தொடர்பாக தனது கருத்தைக் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா (ஐ.தே.க) வேண்டுகோளின் பேரில் அமைச்சர் கம்மன்பில சட்ட வரைவு தொடர்பாக தனது கருத்துக்கள் பற்றி தெளிவாக விளக்கமளித்தார்.

முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆளும் தரப்பு சார்பில் விவாதத்தை முடித்து வைத்தார். எதிர்க் கட்சி சார்பில் உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினர். சிறுபான்மையின உறுப்பினர் என்ற ரீதியில் முஜீபுர்ரஹ்மான் மாத்திரமே உரையாற்றினார். ஜே.வி.பி. சார்பில் வருணதீப்தி ராஜபக்ஷ உரையாற்றினார். எதிர்க் கட்சித் தலைவர் மஞ்சு அரங்கல எதிர்க் கட்சியின் சார்பில் விவாதத்தை முடித்து வைத்தார்.

மேற்படி சட்ட மூலம் தொடர்பான விவாதம் சட்ட மூலத்தை எதிர்ப்பதில்லை என்ற நிலைப்பாட்டுடன் இடம்பெற்றது. மாற்று யோசனைகள், கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இக்கருத்துக்களை பாராளுமன்ற சட்ட மூலம் தொடர்பான தெரிவுக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் உறுப்பினர்கள் தமதுரையில் கோரிக்கை விடுத்தனர்.

சட்ட மூலம் தொடர்பான கருத்துப் பரிமாறல் இடம்பெற்ற பின்னர் தலைமை வகித்த பிரதித் தலைவர் ரஞ்சித் சோமவன்ச எதிர்ப்புகள் இருக்கின்றதா என சபையில் வினவினார். எதிர்க் கட்சியின் பிரதம கொறடா எதிர்ப்புகள் இல்லையெனத் தெரிவித்ததையடுத்து சபையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுடன் உள்ளூராட்சி திருத்த சட்டமூலங்களுக்கு சபையின் இணக்கப்பாடு கிடைக்கப்பெற்றதாக பிரதித் தலைவர் பிரகடனப்படுத்தினார்.

இச்சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக