இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அரசில் உள்ள சில நபர்களுக்கு, அல் - குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் ஒளிந்துள்ள இடம் தெரியும். ஒசாமாவை கைது செய்யும் வரை திருப்தியடையமாட்டோம் என, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹிலாரி கிளின்டன், இது குறித்து பாக்., மண்ணில் இருந்தபடி அமெரிக்க "டிவி'க்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:அரசு சாராத ஆயுதம் ஏந்திய நபர்களை பாகிஸ்தான் மண்ணில் உலவ விடுவது குறித்து பாகிஸ்தான் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால், இது தோட்டத்தில் விஷப்பாம்பை வளர்ப்பதற்கு சமமாகும். அல் - குவைதா தலைவர் ஒசாமா எங்கு ஒளிந்திருக்கிறார், என்ற விஷயம் பாகிஸ்தான் அரசில் உள்ள சில நபர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. இருப்பினும் அவர்களை பற்றிய தகவல்களை குறிப்பிட்ட காலத்துக்குள் அளிக்கும் படிநாங்கள் நிர்பந்தப்படுத்த வில்லை.
இருப்பினும் ஒசாமாவை பிடிக்கும் வரை நாங்கள் திருப்தியடையமாட்டோம். எங்களது நடவடிக்கையால் ஒசாமாவுக்கு நெருக்கமானவர்கள்கைது செய்யப்பட்டும், கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். தொடர்ந்து ஒசாமாவை தேடும் பணியை மேற்கொண்டிருக்கிறோம். அத்துடன் அல்-குவைதா இயக்கத்தில் இரண்டாவது பெரிய நபரான அல்-ஜவகாரியையும் பிடிக்க வேண்டும்.இவர்களைப் பிடிப்பது குறித்து தொடர்ந்து பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி தருவோம்.
இதுவரை அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளில் இவர்களின் ஆதரவாளர்கள், மற்றும் நிதி உதவி செய்தவர்கள் என்று பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.பாகிஸ்தான் அரசில் உள்ளவர்களுக்கு ஒசாமா இருக்கும் இடம் தெரிந்திருக்கும். இதை ஏற்கனவே நான் சொல்லி வருகிறேன். இதுவரை பாகிஸ்தான் அளித்துவரும் ஒத்துழைப்பு நன்றாக இருக்கிறது என்பதைக் கூறியாக வேண்டும். ஆனால், அல்-குவைதா விஷயத்தில் மேலும் மேலும் நெருக்கடி தரவேண்டும் என்ற அடிப்படையில் அதைத் தொடருகிறோம்இவ்வாறு ஹிலாரி கூறினார்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானியையும், ஹிலாரி சந்தித்து பேசினார். பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யை இயக்கி, ராணுவ பலத்தின் பின்புலமாக அரசை இயக்கும் கயானி, தற்போது அமெரிக்காவின் கருத்துக்களை நிறைவேற்றி வருகிறார். அதனால் கியானியுடன், ஹிலாரி பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக