21 ஜூலை, 2010

சர்வகட்சிக் குழுவின் அறிக்கைக்கு ஆளும்கட்சி சபையில் கடும் எதிர்ப்பு

undefined
சர்வகட்சிக் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. ஆர். யோகராஜனுக்கு இடையூறுகளை ஏற்படுத்திய ஆளும் தரப்பினர், அவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு கடுமையான எதிர்ப்பினையும் தெரிவித்தனர். சர்வகட்சிக்குழுவை சமர்ப்பிப்பதற்கு யோகராஜன் எம்.பி. தகுதியற்றவர் எனக் கூக்குரலிட்ட ஆளும்கட்சி அதனை ஹன்சாட்டில் இருந்து நீக்கிவடிடுமாறும் கூச்சலிட்டனர்.

இது இவ்வாறிருக்க ஆளும் எதிர்க்கட்சி எம்.பி.க்களிடையே வாதப்பிரதி வாதங்களும் ஏற்பட்டன. மேலும் தன்னால் சமர்ப்பிக்கப்படுகின்ற சர்வகட்சிக் குழுவின் அறிக்கையை ஹன்சாட்டில் இணைத்துக் கொள்ளுமாறு யோகராஜன் எம்.பி. வேண்டுகோள் விடுத்தபோதிலும் அதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அதனை நிராகரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாயக்கிழமை நடைபெற்ற விதவைகள் விதுரர்கள் மற்றும் அநாதைகளுக்கான ஓய்வூதிய திருத்தச்சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய யோகராஜன் எம்.பி. சர்வகட்சிக் குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பதாகக் கூறினார். அத்துடன், அதில் உள்ள சில விடயங்களையும் வாசித்துக்காட்டினார்.

தினேஷ் குணவர்தன

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்துப் பேசிய ஆளும்கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன, யோகராஜன் எம்.பி. சர்வகட்சிக் குழுவின் அறிக்கையை வாசிப்பதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.

சர்வகட்சிக் குழுவில் அங்கத்துவம் பெற்றுள்ள கட்சிப் பிரதிநிதிகளினது கையொப்பங்கள் இல்லாதுள்ள ஒன்றை ஆவணம் என்று கூறுவதற்கு முடியாது. எனவே, அந்த அறிக்கையை இந்த சபையில் வாசிக்கவோ அல்லது சமர்ப்பிக்கவோ முடியாது எனக்கூறினார்.

இதற்குப்பதிலளித்த யோகராஜன் எம்.பி. கூறுகையில், சர்வகட்சிக் குழுவின் அறிக்கையில் நான் கையெழுத்திட்டுள்ளேன். எனவே, இதில் நானும் ஒரு பிரதிநிதி என்றவகையில் இவ்வறிக்கையை சபையில் சமர்ப்பிக்கிறேன். “அதற்கான பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

முத்து சிவலிங்கம்

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் சர்வகட்சிக் குழுவுக்கு அனுப்பப்பட்டவர்தான் ஆர்.யோகராஜன்.

ஆனாலும் அவர் தற்போது காங்கிஸில் இல்லை. எனவே அவர் அந்த அறிக்கையை சமர்ப்பிக்கத் தகுதியற்றவர் எனவே அவரால் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஹன்சாட்டிலிருந்து நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

முருகேசு சந்திரகுமார்

இதனையடுத்து பதிலளித்த குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் கூறுகையில்,பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு முரணான அனைத்து விடயங்களும் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும் என்றார்.

இதன்போது தனது உரையைத் தொடர்ந்த யோகராஜன் எம்.பி. இறுதியில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட சர்வகட்சிக்குழுவின் அறிக்கையை ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டபோதிலும் அதனை பிரதித் தலைவர் நிராகரித்தார். இருப்பினும் சர்வகட்சிக்குழுவின் அறிக்கையை யோகராஜன் எம்.பி. சபாபீடத்துக்கு அனுப்பிவைத்தார்.

திஸ்ஸவிதாரண அமைதி

சர்வகட்சிக்குழுவின் அறிக்கை தொடர்பில் சபையில் வாத விவாதங்கள், கூச்சல் குழப்பங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் அனைத்து சம்பவங்களையும் சர்வகட்சிக்குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தனது ஆசனத்தில் அமர்ந்தவாறே அமைதியாக அவதானித்துக் கொண்டிருந்தார். எந்தவித கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக