22 ஜூலை, 2010

பிரிட்டனிடமிருந்து மேலும் 57 போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு

பிரிட்டனிடமிருந்து மேலும் 57 "ஹாக்' ரக போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளது.

பிரிட்டனிடமிருந்து ஏற்கெனவே 24 ஹாக் ரக போர் விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது. இந்நிலையில் மேலும் 57 விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்தார்.

பிரிட்டனின் ஃபார்ன்பரோ நகரில் நடைபெறும் உலகிலேயே பெரிய விமானக் கண்காட்சியை பார்வையிட பல்லம் ராஜூ சென்றுள்ளார்.

லண்டனுக்கு சனிக்கிழமை சென்ற அவர், இந்திய விமானப் படைக்கு மேலும் ஹாக் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பல்லம் ராஜு, பிரிட்டனிடம் இருந்து மேலும் 57 ஹாக் போர் விமானங்களை வாங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் பேச்சு நடத்தி முடிவெடுக்கப்படும் என்றார்.

ஒலியைவிட 1.2 மடங்கு வேகம்... ஹாக் ரக போர் விமானத்தை பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரு இருக்கைகளை உடைய இந்த விமானம் ஒலியின் வேகத்தைவிட 1.2 மடங்கு சீறிச் செல்லும் சிறப்புடையது.

பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்த விமானங்களே இடம்பெற்றுள்ளன. பிற நாடுகளுக்கும் இந்த விமானங்கள் விற்கப்படுகின்றன. இதுவரை இந்தியா உள்பட 18 நாடுகளுக்கு 900 ஹாக் விமானங்களை பிரிட்டிஷ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக