21 ஜூலை, 2010

உண்ணாவிரத போராட்டத்தினால் ஐ.நா. நிபுணர்குழு பலமடைந்துள்ளது:ஐ.தே.க

undefined
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு எதிராக அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக, ஐ.நா. வுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதுடன், குறித்த நிபுணர் குழு மேலும் பலமடைந்துள்ளது.

அதாவது மூவர் கொண்ட நிபுணர் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க மேலதிகமாக எட்டு பேர் கொண்ட குழுவை பான் கீ. மூன் நியமித்துள்ளார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இந்த விடயத்தை அரசாங்கம் இராஜதந்திர ரீதியான அணுகியிருக்கலாம். இதனை அரசாங்கத்தின் அமைச்சர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. அமைச்சர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார். இறுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டது. அதனால் இலங்øக்கு என்ன நன்மை கிடைத்தது? ஐ.நா. வுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதுடன் குறித்த நிபுணர் குழு மேலும் பலமடைந்துள்ளது. அதாவது மூவர் கொண்ட நிபுணர் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க மேலதிகமாக எட்டு பேர் கொண்ட குழுவை பான் கீ. மூன் நியமித்துள்ளார் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக அணுகியிருக்கலாம். இதனை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே குறிப்பிட்டிருந்தார். தற்போது மூன்று நிபுணர்களுடன் மேலும் எட்டுப் பேர் இணைந்துகொண்டுள்ளனர். ஐ.நா. முன்பிருந்தததைவிட பலமடைந்துள்ளது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன

இதேவேளை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றது. கடந்த வார இறுதியில் 30 ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அடுத்தவாரம் 25 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். மொத்தமான நான்கு கிழமைகளில் 135 ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

முக்கியமாக நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்கிவிட்டு பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறும் வகையில் பிரதமர் பதவியை உருவாக்கவேண்டும் என்றும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவேண்டும் எனவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுக்கவேண்டும் என்று கோரியே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரக்ஷிக குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவரை சாதாரண நீதிமன்றத்தில் விசாரிக்கவேண்டும்.

கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டம்

அரசாங்கம் கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் செய்து அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? அமைச்சர்கள் அனைவரும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தமையினால் அதிகம் செலவுகளே ஏற்பட்டுள்ளன. நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது. இதனை விடுத்து அப்பகுதி மக்களுக்கு நன்மைகள் ஏற்படும் வகையில் அரசாங்கம் நடவடிக்கையை எடுக்கவேண்டும். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச வடக்கு பகுதியில் ஒருகாலத்தில் நடமாடும் சேவைகளை நடத்தினார். அதனால் அப்பகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைத்தன.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நாங்கள் தற்போது இழந்துள்ளோம். ஆனால் இது தொடர்பில் அரசாங்கத்தின் மாற்று நடவடிக்கை என்ன என்று இதுவரை தெரியவில்லை. ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நாங்கள் இழப்பதனால் 3 இலட்சத்து 34 ஆயிரத்து 604 பேர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் தொழில் கேள்விக்குறியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையின் அடிப்படையில் 7200 பொருட்களை ஏற்றுமதி செய்கின்றோம். அதனை ஈடுசெய்ய அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக